கரைவளியில் ஆடிப்பெருக்கு
கரைவளியில் ஆடிப்பெருக்கு
தென்கொங்கு நாட்டில் ஆன்பொருநை எனும் அமராவதி நதி உழவர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் வாழவைத்துள்ளது. மக்களின் வாழ்க்கையை நீரோடும், உழவோடும் இருந்ததை நமது கரைவளி நாடும் நாகரிகமும் நூலினுள் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவு செய்துள்ளோம்.
இன்று ஆடிப்பெருக்கு ஆடி 18 இந்த நாளை முன்னிட்டு சில நிகழ்வுகளை நம் கண் முன் நிறுத்துவோம்.
கரைவளியில் கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையிலான அனைத்து சிற்றூர்களிலும் முளைப்பாரி எனும் நவதானியங்களை அமராவதி ஆற்றினில் விட்டு அது எப்படி வளர்கிறது என்பதை விதைப்புத் திருவிழாவாகக் கடந்த காலங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று அனைத்து உழவர் பெருமக்களும் தத்தம் மாடுகளை வண்டிகளில் பூட்டி திருமூர்த்தி மலை சென்று இரவு தங்கி மறுநாள் காலை வண்டி மாடுகளுக்கு வழிபாடு செய்து பிறகு திரும்புகின்றனர். தாம் சேமித்து வைத்த ஒரு சில விதை நெற்களையும் நீரில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் இருந்தாலும், இந்த ஆடி பெருக்கு எனும் ஆடி 18 ஐ நீர் வழிபாட்டை முன்னிறுத்தியே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
கடத்தூர் பகுதியில் நிலத்தில் சித்திரமேழி எனும் தங்கத்தாலான மேழியைக் கொண்டு இன்று நிலத்தில் உழவு உழுதல் பணியைத் துவங்கி உள்ளனர்.
கண்ணாடிப்புத்தூர் பகுதியில் நவதானியங்களை முளைப்பாரியாக வைத்து பெண்கள் இன்று மாலை அமராவதி ஆற்றில் விடுகின்றனர். இது பெருவிழாவாகக் கடந்த காலங்களில் நடந்து வந்தது. ஆனால் தற்போது இது வெறுமனே சடங்கிற்காக நடந்து வருகிறது.
உழவு சார்ந்த பணிகள் ஆறு மாதமும் அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆறு மாதம் என வருடம் முழுமைக்கும் உழவர்கள் பணிகளை மேற்கொண்டு வந்தது கடந்த காலங்களில் களப்பணிகளில் களத்தரவுகளிலும் தெரிய வந்தது. தற்போது முற்றிலுமாக இது அருகி வருகிறது.
இருப்பினும் கண்ணாடிப்புத்தூர், கல்லாபுரம் கடத்தூர் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே இந்த நீர் சார்ந்த புதுப்புனல் ஆடிப்பெருக்கு நீர் வழிபாடு இன்றும் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் இன்று நீர் நிலைகளுக்கு பொழுது போக்கிற்காகவே செல்கின்றனர். புதுப்புனல் நீர் வழிபாடு காலப்போக்கில் அருகி வருவதையே இது காட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை தளி சாலையில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் திருமூர்த்தி மலைக்குச் செல்லும், இடையில் உடுமலை நகரத்தில் இன்று ஒரு நாள் மட்டும் நகரைக் கடந்து செல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.
இன்று மாட்டு வண்டிகளும் இல்லை, மாடுகளும் இல்லை, நீர் சார்ந்த வழிபாடுகளும் இல்லை.
மேலும், ஆடிப்பெருக்கு முடிந்து அடுத்த நாட்களில் முயல் வேட்டை, பன்றி வேட்டை,எலி வேட்டை என வேட்டையாடுதல் பழக்கமும் நமது கரைவளியில் குறிப்பாக சாமராயபட்டி, கொமரலிங்கம், எலையமுத்தூர், கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்துள்ளது.
இதற்காக ராஜபாளையம், கோம்பை நாய்களும் வளர்க்கப்பட்டு வந்தது. காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்பட்டு அதை மாட்டு வண்டியில் ஊருக்குள் கொண்டு வருவது ஒரு வேடிக்கையாகவும் திருவிழாபோன்று இருந்து வந்தது. தற்போது இது அரசின் சட்டதிட்டங்களால் முழுமையாக இல்லை.
கொமரலிங்கம் பொதுமக்கள் மழை வேண்டி கல்லாபுரம் கோயிலில் வழிபாடு செய்து விட்டு ஊருக்கு வருவதற்குள் மழைநீர் கொமரலிங்கம் வந்துவிடுவதாக களத்தரவுகள் தெரிவிக்கின்றன. இன்று நீர் சார்ந்த வழிபாடுகளும், வழிபாட்டு மரபுகளும் மறைந்து வருகின்றன.
மேலும் ஆடி 18 திருவிழாவில் கிராமப்புறங்களில் செய்யப்படும் சிறுதானியத் தின்பண்டங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளோம். இன்று அவையெல்லாம் என்னவானது என்று தெரியவில்லை.
இருப்பினும் ஒரு சில பழக்கவழக்கங்கள் சிற்றூர்ப்பகுதிகளில் குறிப்பாக கரைவளியில் இருப்பதை நமது வெளியீடான கரைவளி நாடும் நாகரிகமும் நூலினுள் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவு செய்துள்ளோம்.
உடுமலை வரலாறு 03.08.2024


Comments
Post a Comment