பெரும் சம்பளம் இருந்தும் மக்கள் ஏன் ஐடியில் இருந்து வேலையை விட்டு வெளியேறுகிறார்கள்?
கேள்வி கேட்டவர் "தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO), தலைமை மனிதவள மேம்பாட்டுத்துறை (Chief HRD)' போன்றவர்களை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இவர்கள் தான் இப்போதெல்லாம் ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு பல கோடி ரூபாய் சம்பளத்திற்கு மாறுகிறார்கள்.
மற்றபடி Software Engineer, Tech Lead, PM, SPM, Consultant போன்றவர்கள் எவரும் அப்படி அதிகச் சம்பளத்தைத் தூக்கி போட்டு விட்டு பணியை விட்டு வெளியேறுவது கிடையாது. 40 மற்றும் 50 வயதிலும் AI கோர்ஸ் அது இது என்று பலரும் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டிருப்பது எதற்காக? வேலையைத் தூக்கி போட்டுவிட்டு போவதற்கா? இருக்கின்ற வேலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான்.
பொருளாதார வசதி இருப்பவர்கள் வேண்டுமானால் ஒரு கட்டத்திற்கு மேல், IT பணியை உதறிவிட்டு அவர்களுக்குப் பிடித்தமான துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்வார்களே தவிர, மீதம் இருக்கும் 90% சதவிகிதம் பேர் 'நேற்று, இன்று, நாளை மற்றும் 24/7/365/Life Time' முழுவதும் கார்பரேட் அடிமைகள் தான்.
கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பமானது 25,000 முதல் 30,000 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறார்கள், அல்லது மாதம் 75,000 ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் EMI கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடன் பிள்ளைகளின் வருடாந்திர ஸ்கூல் பீஸ், பிற குடும்பச் செலவுகள் என்று கணக்கிட்டு பார்த்தால் 'லட்சம் இருந்தும் பிச்சைக்காரன்' நிலைமை தான் பெரும்பாலான IT ஊழியர்களின் நிலைமை. கம்பெனி நிர்வாகம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால் கூட வாசலில் உட்கார்ந்து கண்ணீர் விடும் நிலைமையில் தான் பெரும்பாலோனோர் இருக்கிறார்கள்.
மேலும் 2020, 21 மற்றும் 2022 வரை அள்ளிக் கொடுத்த அனைத்துக் கம்பெனிகளும் இப்பொழுது பில்லிங் குறைவாக வருகிறது என்று அதிகம் சம்பளம் வாங்குகிறவர்களைக் கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டன. சத்தமின்றிப் பணி நீக்கம் ஆங்காங்கே நடந்து கொண்டு தானிருக்கின்றன.
ரோஷம் பார்த்தால் குடும்பம் தெருவில் தான் நிற்க வேண்டும் என்று அனைவரும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்னவென்றால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். திறமை இருந்தால் வேறு பணி எளிதாகக் கிடைக்கும் தான், ஆனால் என்ன தான் அற்புதமாக டீ போடும் மாஸ்டராக இருந்தாலும், ஆளே வராத கடையில் அவரைப் பணியில் அமர்த்தி என்ன பலன் சொல்லுங்கள். தற்போதைய நிலைமை அப்படித் தான்.
"என் திறமைக்கேற்ப சம்பளம் கொடுக்கும் இடத்திற்குப் போகிறேன்.." என்று அலட்சியமாகக் காலரை தூக்கிய பலர், அவர்கள் வேலை செய்த முன்னாள் கம்பெனிக்கு அதே பழைய சம்பளத்திற்கு வாய்ப்பு கேட்டு இமெயில் அனுப்புவதாகச் சமீபத்தில் சில புரளிகள் உலாவுகின்றன.
ஒரு பக்கம் கிரெடிட் கார்ட் வாராக் கடன் ஏறிக் கொண்டே போகிறது மற்றும் வீட்டு லோனுக்கான மாதாந்திர EMI தொகையைச் சரிவரக் கட்டுவதில்லை என்ற புரளியும் இருக்கிறது. அதே போல நகைகளை அடகு வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 'தங்கமயில், முத்தூட் பைனான்ஸ்' போன்ற நகை கடன் வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறிக் கொண்டே போவதில் இருந்தே, நம்மைச் சுற்றி ஏதோ சரியில்லை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment