ரத்தின மூர்த்தி
நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த கிராமத்தின் காட்டுக்குள் இருந்த கோவிலுக்குச் சென்றேன். கோவில் இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. மக்களும் அப்படியே இருக்கிறார்கள். அதுதான் சிறப்பு. இந்தக் கிராமத்தில் ஒரே குழுவாக தொட்டிய நாயக்கர் இனம் மட்டுமே இருக்கிறது. வஞ்சகம் பொறாமை சுயநலம் என்பதெல்லாம் தங்களிடத்தில் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
ஆடிப்பதினெட்டான இன்று பொங்கல் வைத்து கிடாய் வெட்டி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர் மக்கள். கிடாய் வெட்டுப் பூசாரி கிடாய் வெட்டும் பொழுது ஒரு பூவை பறிப்பது போல அந்த கிடாய்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருந்தார். அரிவாள் அவ்வளவு கதுமையாக இருக்கிறது போலும். அந்த வெட்டில் ஒரு துளி வலியைக்கூட கிடாய்கள் உணர்ந்திருக்க வாய்ப்பே இருக்காது.
அந்தக் கிராமத்து மண் வாசனையை இன்னும் அப்படியே நுகர முடிகிறது. சிறுவயதில் இருந்து நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை எளிமையாக அப்படியேதான் இருக்கிறது. எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ ஆடம்பரமோ தற்பெருமையோ இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வெற்றுப் பகட்டு நாகரிகமும் அவசர காலமும் அவர்கள் கிராமத்தைச் சுற்றி வளைக்காமல் இருக்க வேண்டும் என்று நான் மனதார அங்கிருந்த காட்டுக் கருப்பனிடம் வேண்டிக்கொண்டேன்.
அனைவருக்கும் ஆடிப்பெருக்கு திருநாள் வாழ்த்துகள்!



Comments
Post a Comment