வேட்டை
தங்கள் விளைநிலங்களில் விதைத்த பயிர்களையும் விளைவித்த பயிர்களையும் காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றக் கோரும் போராட்டமாகும். பழங்காலத்தில் இதே காடுகளும், இதே மிருகங்களும் இருந்துகொண்டுதான் இருந்தன. இன்னமும் கூடச்சொல்லப்போனால் இப்போதுள்ள பயிர்களைவிட மிக சுவையான தீவனங்கள், மிருகங்களுக்குரிய தீவனங்கள் இந்தக்காடுகளில் விளைவிக்கப்பட்டு வந்தது. அப்போதுமட்டும் காட்டிலிருந்த மிருகங்கள் வந்து இந்த விதைகளையும் விளைபொருட்களையும் அழிக்காமலா இருந்தது? தற்போது மட்டும் ஏன் இந்தப் பயிர்கள் அழிவில் சிக்குகிறது.
அப்போதைய விவசாயிகள் இந்த விளைநிலங்களை எப்படிக் காப்பாற்றினார்கள். தற்போது ஏன் அவர்களால் இயலவில்லை. ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இதற்கு ஒரே காரணம். மத்திய மாநில அரசுகளின் தற்போதைய தவறான வனக்கொள்கையே ஆகும். அந்தக் காலத்தில் அதாவது 1960 க்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையோரங்களில் இருந்த கிராமங்களில் ராகி, சோளம், கம்பு போன்ற தானியப்பயிர்களும், தர்பூசணி (நீர்க்காய்) வெள்ளரிக்காய், போன்ற சுவையான தீவனப்பயிர்களும் மிக அதிகளவில் பயரிடப்பட்டு வந்தன.
இந்த பயிர்களை உண்பதற்காக மலைப்பகுதியிலிருந்து யானைகள், பன்றிகள் ஆகியவை இந்தக்காடுகளை நோக்கி வந்தன. இதே போல் பறவை இனங்களான கிளி, மயில், கொக்கு ஆகியவையும் இந்தக்காட்டுப் பகுதிகளுக்குள் வந்தன. இதனால் பெரும் சேதங்களை விவசாயிகள் அனுபவித்தார்கள். மயில்கள் விதைக்கின்ற நிலக்கடலை, கம்பு சோளம் ராகி திணை போன்ற விதைகளை காட்டுக்குள் புகுந்த தங்;களுடைய அலகால் கொத்தித் தின்று விதைகளை முளையிலேயே அழித்துவிடும்.
இந்தப் பயிர்கள் விளைந்தபின் காட்டுப்பன்றிகள், பூமிக்குள் புகுந்து சேதங்களை உருவாக்கும். குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய் , நிலக்கடலை. ஆகிய பயிர்களை வேருடன் பன்றிகள் தோன்றிவிடும். தற்பொழுது யானைகள் இதே காட்டுக்கள் பகுந்து தர்பூசணி, மக்காச்சோளம், கரும்பு, வாழை, தென்னை ஆகிய பயிர்களை வேருடன் பிடுங்கியும் மிதித்தும் சேதப்படுத்தி தங்களுக்குத் தங்களது பசிசை ஆற்றுக்கொள்கின்றன.
தோப்புகளில் குரங்குகள் பழங்களை தின்று சேதப்படுத்துவதல்லாமல் பிடுங்கி கீழே வீசி சேதப்படுத்துகின்றன. அப்போதைய விவசாயிகள் தங்கள் விளைநிலத்திற்குள் அத்துமீறி வனத்திற்குள்ளிருந்து காட்டுக்கு வந்து பயிர்களை உணவாக உண்டு. காலால் மிதித்து சேதப்படுத்தும் யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற மிருகங்களை எப்படித் தடுத்து நிறுத்தினார்கள்.
இவ்வாறான சேதங்களைத் தடுப்பதற்காக பழங்காலத்தில் மலையோர கிராம விவசாயிகள் ஒரு மிகச்சிறந்த முறையைக் கடைபிடித்து வந்தார்கள். அந்த முறைதான் நாய்ப்படை அமைத்து வேட்டையாடும் முறை. இந்த முறையில் ஒவ்வொருகிராமத்திலும் சுமார் 20 க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் ஒவ்வொரு வீடுகளிலும் பெரிய விவசாயிகள் வளர்த்து வந்தார்கள்.
இந்த நாய்கள் மற்ற நாய்களைப் போல் உலைக்காது. அதே போல் மிக மோசமான உணவுகளைச் சாப்பிடாது. அந்த நாயினுடைய எஜமானர்கள் இந்த நாயிக்கு ஆரோக்கியமான மக்கள்சாப்பாடு உட்பட நல்ல சாப்பாடு கொடுப்பார்கள். இந்த நாய்கள் பார்வைக்கே பயங்கரமானதாக இருக்கும். தோட்டங்களிலும், வீடுகளிலும், விவசாயிகள் இதை வளர்த்து வருவார்கள். இந்த நாய்களை வழிநடத்துவதற்கு சில குறிப்பிட்ட வேட்டைப்பிரியர்கள் இருப்பார்கள்.
அவர்களை இந்த வேட்டை நாய்கள் நன்றாக இனம் கண்டு வைத்திருக்கும். இந்த வேட்டைப்பிரியர்களுக்கும் நாய்களுக்கும் ஒரு அனுபவமான வேட்டைக்காரர் தலைவராக இருப்பார். அவர் வேட்டைத்தலைவர் என்று அழைக்கப்படுவார். இந்தப் படையில் எவர் வேண்டுமானாலும் சேர்ந்து வேட்டைக்குச் செல்லலாம். இந்தப் படையில் இரண்டு வல்லயம் பயன்படுத்தும் அனுபவசாலிகள் இருப்பார்கள்.
ஏதாவது ஒரு பகுதியில் யானை நடமாட்டமோ,காட்டுப்பன்றி நடமாட்டமோ இருக்கிறது என்று ஏதாவது ஒரு விவசாயி இந்த வேட்டைப் படையினருக்குத் தகவல் சொல்லுவார் அன்றிறவு 'கரிக்கொம்பு' என்ற சங்கொலி மூலம் இரவு சுமார் 9 மணிக்கு வேட்டைத் தலைவர் இன்றைக்கு வேட்டைக்குப் போகும் அறிவிப்பை அறிவிப்பார். இந்த ஒலியைக் கேட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய வேட்டை நாய்களை வீட்டு எஜமானர்கள் அவிழ்த்து விட்டு விடுவார்கள். இந்த வேட்டை நாய்கள் வழக்கமாகக் கூடும் வேட்டைத் தலைவர் வீட்டுக்கு விரைந்து சென்றுவிடும்.
ஊடனடியாக அவைகளின் படை தயாராகிவிடும். இந்த வேட்டை நாய்களும் வேட்டை ஆட்களும் இரவு பத்து மணிக்கு மேல் அமைதியாக கிராமத்திலிருந்து அந்த காட்டுப்பன்றி அல்லது யானை உலவுவதாக செய்தி வந்த திசை நோக்கி செல்வார்கள். இந்த வேட்டை நாய்கள் மிகுந்த மோப்ப சக்தி உடையவை. பன்றி இருக்கும் இடத்தை துல்லியமாக உணர்ந்து அவைகளை சுற்றி வளைத்து பிடிக்கும். குறிப்பாக இந்த நாய்களில் அனுபவபப்பட்ட சில நாய்கள், பன்றியின் உயிர்நிலையைப் பிடித்துக்கொள்ளும் .பன்றி வீறிட்டு அலறும். உடனடியாக மற்ற நாய்களும் அதைச் சூழ்ந்து கடிக்கத் தொடங்கும். இந்த நேரத்தில் வல்லயம் வைத்திருக்கும் வேட்டைக்காரர்கள் அந்தப் பன்றியைக் குத்திக்கொல்வார்கள் பின்னர், விடியும் வரை காத்திருந்து கட்டை வண்டிகளில் பன்றியை ஏற்றிக்கொண்டு அவரவர் ஊருக்கு வருவார்கள்.
இந்தப்பன்றிகளை அவர்கள் வேட்டைக்கு வந்த நபர்களுக்கும் வேட்டை நாய்களுக்கும் கூறு போட்டு சமமாகப் பங்கி கொடுத்துவிடுவார்கள். இந்தப்பன்றிக் கறியை வேறு ஊருக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்யமாட்டார்கள். பன்றியின் பல்லை அந்த ஊரில் உள்ள வேட்டைக்காரக் கருப்பணசாமி என்கிற கோயிலில் மாலையாகக் கட்டி தொங்கவிட்டுவிடுவார்கள். வேட்டைக்குப் போகும் முன்பு வந்த பின்பும் இந்த சாமியை எல்லோரும் வணங்கிவிட்டுத்தான் செல்வார்கள்.
காட்டுப்பன்றி என்பது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் ஒரு கடுமையான காட்டு மிருகமாகும். இது காலினால் உதைத்தும். முகத்தால் குத்தியும் மனிதர்களையும் நாய்களையும் கொன்றுவிடும் அபாயம் உள்ளது.
இந்த வேட்டைகள் விவசாயிகளுடைய பட்டா பூமியில்நடத்தப்படும். மலைப்பகுதிக்கு செல்ல மாட்டார்கள். மலையோர கிராமங்கள் பட்டா பூமி என்றும், வனச்சரக எல்லையின் மூலம் வனப்பகுதி என்றும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.
எந்த நாய்ப்படையும் வனத்துக்குள் போகாது. நாய்ப்படையின் கடிகளுக்கும் உயிரிழப்பிற்கும் பயந்து காட்டுப்பன்றிகள் நிலப்பகுதிக்கு வராது. யானைகளும், இந்த நாய்கனிள் கடிபட்டால் இறந்துவிடும். அதுவும் வராது.
Comments
Post a Comment