தொலைந்து போகுமா தொல்லியல் துறை . . . மறந்து போகுமோ . . . மாணவர்களிடம் . .
தொலைந்து போகுமா தொல்லியல் துறை . . . மறந்து போகுமோ . . . மாணவர்களிடம் . .
அனைவரும் அனைத்து படிப்புகளையும் படிக்கும் போது தொல்லியல் சார்ந்த படிப்புகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. ஏன், அது குறித்தான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு அடிப்படைக்காரணம்.
தமிழ்நாட்டில் கீழடி அகழ்வாய்வுக்குப்பிறகு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு அதிகமாக மக்களிடம் சென்றடைந்துள்ளது. இது நம் மண்ணின் பெருமை என்பதைக் காட்டிலும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு என்பதையே நமக்கு உணர்த்துகிறது. சென்னை புத்தகத் திருவிழாவிலும், ஈரோடு புத்தகத் திருவிழாவிலும் வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த புத்தகங்கள் 20 முதல் 30 விழுக்காடுகள் விற்பனையாவதிலிருந்து தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்தது உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும், கொடுமணல், கீழடி , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுக்கு அரசின்சார்பிலும், கல்வி அமைப்புகளின் சார்பிலும் அகழ்வாய்வு நடக்கும் போதும். அகழ்வாய்வு நடந்து முடிந்த பிறகும் அந்த இடங்களை மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மற்றும் கோவை , தஞ்சை போன்ற முகாமையான மாவட்டத் தலைநகர்களில் ஒரு சில ஊர்களில் மட்டுமே இந்தத் தொல்லியல் சார்ந்த பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் இருந்து வருகிறது.
தொல்லியல் ஆய்வறிஞர்களும் தமிழ்நாட்டின் 33 மாவட்டத்திற்கும் இருக்கின்றார்களா என்றால் இல்லை. ஏனெனில் தொல்லியல் மண்டலங்களாகவும், அருங்காட்சியகம் இருக்கும் பகுதிகளில் மட்டுமே அலுவலகம் செயல்பட்டு வருவதால் அந்த மாவட்டத்தில் மட்டுமே இதனைக் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.
மேலும், ஏராளமான தொல்லியல் சின்னங்கள் சாலைப் பகுதிகளிலும் காட்டு பகுதிகளிலும் இருப்பது இன்று வரையிலும் கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கிறது. மேலும், கல்வெட்டுகள் இருக்கும் நெடுங்கற்கள் ஒரு சிலரின் அறியாமையினால் கட்டிடம் கட்டுவதற்கும், அருகில் கோயில் கட்டினால் இதை வைத்துக் கட்டவேண்டும் என்று எண்ணத்தோடும் இந்தக் கல்வெட்டு கற்களை வைத்து கட்டிவிடுகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் அந்தந்த ஊரின் பெயர்களிலேயே அடங்கியிருக்கிறது. ஆனால் அது காலப்போக்கில் சிதிலமடைந்து கேட்பாரற்று வருகிறது.
பொதுமக்கள் ஒரு சில நடுகற்களை வணங்கி வருவதாலும் அதைத் தொட்டால் ஏதேனும் நடந்து விடும் என்பதால் அதனைத் தொடுவதற்கு அச்சப்பட்டு மண்ணிற்குள் புதைந்து விடும் நெடுங்கற்களும், கற்திட்டைகளும், கல்வட்டங்களும் உண்டு.
இதையும் மீறி உடுமலை மெட்ராத்தி பகுதியில் 125 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. ஆனால் தற்போது 40 முதல் 50 கல்வட்டங்களே இருக்கிறது. இதை அந்தப் பகுதி மக்களிடம் கேட்டால் இது ஆகாத காடுங்க , இங்கெ நாங்கள்லா யாரும் போகமாட்டோம் என்று சொல்கின்றனர். அந்தக் கல்வட்டங்கள் பெரும் முதலாளிகளின் ஆக்கிரமிப்பில் காத்தாடிக்காடுகளாகவும் மாறிவருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அந்தக் கல்வட்டங்களும் இருக்க வாய்ப்பில்லை.
மேலும் கொங்கு மண்டலத்தில்தான் ஏராளமான காசுகளும் எடுக்கப்பட்டது. நெய்க்காரபட்டி, வடபூதிநத்தம், கடத்தூர், கண்ணாடிப்புத்தூர் போன்ற பகுதிகளில் ரோமானிய அகஸ்டஸ் காசுகள் கிடைத்தற்கான சான்றுகளும் உண்டு. மேலும், தனியர் சில தோட்டங்களில் கருப்பு சிவப்பு ஓடுகள், மண்பானைகள், தாளிகள் போன்றவை இருந்தும் ஏதேனும் தொல்லியல் ஆர்வலர்கள் பார்க்க வேண்டும் என விரும்பினால் அதைக் காட்ட மறுப்பதும், இதைக்காட்டினால் நம் காட்டுக்கு தோண்ட வந்துவிடுவார்கள் என்றும், இது போன்ற தொல்லியல் சின்னங்கள் கிடைத்தால் இப்பொழுதெல்லாம் யாரும் வெளியில் சொல்லவே அச்சப்படுகின்றனர்.
தொல்லியல் படிப்பு
தொல்லியல் பாடம் என்பது பண்டைய வரலாற்றையும், அகழ்வாய்வு தொடர்பானதாகவும் அறியப்படுகிறது. இந்தத் துறையானது நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதை உள்ளடக்கிய ஒரு இடைநிலை நடவடிக்கையாகும். முன்னதாக மனித சமூகம் பொருட்களை உருவாக்கியது மற்றும் அந்தப் பொருளை அடையாளம் காண்பது. தொல்லியல் நீரோட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. வுரலாற்றுத் தளங்களின் அகழ்வாய்வுகள், மேலாய்வுகள் கடந்த கால நாகரிகத்தில் கவனம் கொள்ளப்படுகிறது. வரலாற்று செய்திகள் நாகரிகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தத் துறைக்கு ஏற்றவர்கள். தொல்லியல் துறையானது டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. தற்போது இணைய வழியாகவும் இந்தப்பாடங்கள், அதாவது கல்வெட்டியல் தொடர்பான படிப்புகள், தொல்லியல் தொடர்பான படிப்புகளும் இணையவழியில் கற்றுத் தரப்படுகின்றது.
இந்தியாவில் தொல்லியல் துறையில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்வருமாறு உள்ளது. அது பண்டைய இந்தியக் கலாச்சாரத்தில் இளங்கலை பட்டதாரிகள், பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் இளங்கலை, கலை தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தில் இளங்கலை, தொல்லியல் துறையில் முதுகலை கலை இலக்கியம், அருங்காட்சியகப்படிப்பும் முதுகலையில் உள்ளது.
தொல்லியல் படிப்புகளை 12 ஆம் வகுப்பு முடித்த யாவரும் தொடரலாம். மேலும் இளங்கலை படிப்பில் குறைந்த 55 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் சேர்ந்து படிக்கலாம். இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழ் படித்தவர்களுக்கு இது கூடுதலாகவும் இலகுவாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போதைய பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் உள்ளுர் வரலாறுகளும் இணைக்கப்படுவதால் தொல்லியல் சார்ந்த கல்வி பயில ஏதுவாகவும் இலகுவாகவும் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. தொல்லியல் துறையில் விருப்பமுள்ள ஆர்வமுள்ள அனைவரும் சேர்ந்து படிக்கலாம்.
கீழடி, கொடுமணல்,ஆதிச்சநல்லூர் சென்று பார்க்கும் மாணவர்கள் தாமும் இது போன்று தொல்லியல் துறையில் சாதிக்கவேண்டும் என்பதே தொல்லியல் துறையின் அடிப்படை தகுதி. வேறு கூடுதலான தகுதிகள் என்பது அவர்களின் பட்டப்படிப்பும், தொல்லியல் கள அனுபவங்கள்தான். தம்முடைய ஊர்ப்பகுதிகளில் உள்ள தொல்லியல் சின்னங்களையும், கல்வெட்டுகளையும் முடிந்தளவு பார்த்துப் படிக்க ஆரம்பித்தால் போதும் அவர்கள் தொல்லியல் ஆர்வலர்கள், பின்னாளில் தொல்லியல் ஆய்வாளராகும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
தொல்லியல் பாடப்பிரிவு சார்ந்த கல்வி தரும் கல்லூரிகள் இந்தியாவில்
தொல்லியல் துறை, புதுதில்லி, தேசிய அருங்காட்சியகம், புது தில்லி, தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம், புது தில்லி, பரோடா எம்.எஸ்.ஜி. பல்கலைக்கழகம்,மெட்ராஸ் பல்கலைக்கழகம் சென்னை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆக தொல்லியல் சார்ந்த கல்வியைத் தரும் ஆறு பெரு நிறுவனங்களில் இரண்டு நமது தமிழ்நாட்டில் உள்ளது. இதுவே நம் மாணவர்களுக்கும், கல்வி பயில மிகவும் ஏதுவாகவும் வாய்ப்பாக உள்ளதென்றால் மிகையில்லை.
தொல்லியல் படிப்புக்கான தகுதி அளவு
தொல்லியல் படிப்பு சேர டிப்ளமோ அடிப்படைத் தேவை, இதற்குப்பிறகு 10 ஆம் வகுப்பு அல்லது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
தொல்லியல் மேற்படிப்பு அல்லது இளங்கலை பட்டத்தில் வரலாறு பாடம் அல்லது ஏதேனும் இளங்கலையில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தொல்லியல் அல்லது முதுகலை பட்டப்படிப்புகளில் முதுகலை நிலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் இளங்கலை அல்லது குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும்.
சேர்;க்கை முறை
தொல்லியல் துறையில் பட்டய படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப:பு தகுதி மதிப்பெண் பட்டியல்களுடன் நேரடியாக தங்கள் சேர்க்கை செயல்முறையை முடிக்கலாம். தொல்லியல் துறையில் பட்டய படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு ஏதும் இல்லை. தொல்லியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு கல்லூரிகள் தங்கள் சொந்த நுழைவுத்தேர்வை நடத்துகின்றன. அல்லது தகுதிப்பட்டியலுடன் மற்றொரு சிறந்த நுழைவுத்தேர்வை கருத்தில் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தொல்லியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான ஐPரு ஊநுவுஇ யுருஊநுவு மற்றும் ஊருநுநு நுழைவுத்தேர்வுகளையும் வழங்கலாம். ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் அந்தந்த நுழைவுத்தேர்வுக்குத் தகுதிபெற்ற பிறகு அடுத்த செயல்முறைக்கு நீங்கள் இணையவழி விண்ணப்பத்தை பயன்படுத்தலாம்.
தொல்லியல் துறையில் ஆரம்பகாலத்தை இரும்புக்காலம், வெண்கலக்காலம், பெருங்கற்காலம், என்றும் கல்வெட்டுக்காலம், கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், மற்றும் தற்காலம் என்றும் கூறுகின்றனர். கல்வெட்டு எழுத்துக்களை தமிழி கல்வெட்டு என்றும், பிராமி எழுத்துக்கள் என்றும். வட்டெழுத்து என்றும் ஆய்வறிஞர்கள் வகைப்படுத்துகின்றனர். இதனை கி.மு. ஆண்டெனவும். கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவாகவும் எட்டாம் நூற்றாண்டு வரை ஒரு வகையாகவும், 10 ஆம் நூற்றாண்டு வரையிலும். 13 ஆம் நூற்றாண்டு வரையிலம் கால அளவுகளாகவும் எழுத்தின் வடிவங்களையும் எழுத்துப்பொறிப்புகளை வைத்து வகைப்படுத்துகின்றனர்.
பொதுவாக ஆரம்ப கால கல்வெட்டு, வெளிநாட்டு நாணயங்களை வைத்து காலம் நிர்ணயம் செய்தல், வெளிநாட்டு பயணிகள் வருகை குறித்து அளவீடு செய்தல். நடுகற்களை வைத்து கால அளவீடு செய்தல், பாறை ஓவியங்களில் வெள்ளை ஓவியங்கள், செஞ்சாந்து எனும் சிவப்பு ஓவியங்களை வைத்து கால அளவீடு செய்தல், கற்திட்டைகளை வைத்து கால அளவீடு செய்தல், கல்வட்டங்களை அகழ்வாய்வு செய்து அளவீடு செய்தல் என காலங்களை தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தி ஆய்வு செய்கின்றனர். பொதுவாக வழக்கில் கி.பி. மற்றும் கி.மு. மட்டுமே உள்ளது. தொல்லியல் ஆய்வறிஞர்கள் இதனையும் தாண்டி வெகு தூரம் பயணித்து சிரத்தையெடுத்த ஆவணப்பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
தொல்லியல் அறிஞர்கள் கல்வியாளர்களுக்கும் மேலாக மதிக்கப்படுகிறார்கள். கீழடி நாகரிகத்தை உறுதிப்படுத்தும் போது இந்தத் தொல்லியல் ஆய்வாளர்களின் கல்வெட்டு அறிவும், பட்டறிவு மட்டுமே தமிழர் நாகரிகத்தை ஆழங்கால் பதிக்க வைத்தது. வையாவிக் கோப்பெரும்பேகனின் பொருந்தல் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்தது. மெய்யெழுத்துக்களில் முடியும் பெயர்களையும் வெளிப்போந்தது.
தொல்லியல் படிப்பு படித்தால் நிரம்ப வேலை வாய்ப்புகள் இருப்பது நம் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அருங்காட்சியகங்களின் காப்பாட்சியர், தொல்லியல் துறை அலுவலர்கள், மாவட்ட, மண்டல, தலைமை அலுவலர்கள் என பெரும்பான்மையான அலுவலர்கள் தங்களின் பணிக்காலம் முதுமைஅடைந்தும் அவர்களை கூடுதல் பொறுப்பாக்கி வைத்துள்ளது. மேலும், சில மாவட்டங்களில் மாவட்ட, மண்டல அலுவலர்கள் இல்லாமல் கூடுதல் பொறுப்பாக்கி, பொறுப்பு அலுவலர்களாகவே பெரும்பாலும் பணியாற்றுகின்றனர்.
அகழ்வாய்வுகள் நடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்க்கும் போது தமிழ், வரலாறு படிக்காத பிள்ளைகள் அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபடுத்துவதும், மத்திய அரசின் 100 நாள் பணியாளர்களை அகழ்வாய்வுப்பணிகளில் ஈடுபடுத்துவதிலிருந்து அடிப்படைப்பணியாளர்கள் முதல் அலுவலகப்பணியாளர்கள் வரை பணியிடங்கள் காலியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் தொல்லியல் சார்ந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் அந்த இடத்திற்கு வந்து கள ஆய்வு மேற்கொள்வதென்பது சற்று கடினமானதாகவே உள்ளது. கேரளாவில் கற்திட்டைகளையும் பாறை ஓவியங்களையும் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். அதற்கென தனியாக உள்ளுர் நபர்களை நியமித்து அவர்களே பராமரிக்கவும் வசூலான தொகையில் 60 விழுக்காடு பணியாளர்களுக்காகவும், 40 விழுக்காடு அரசுக்கும் சென்றடைகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொல்லியல் எச்சங்கள். நினைவுச்சின்னங்கள் உள்ள இடங்கள் திறந்தவெளி பார்களாகவே செயல்படுகிறது.
மேலும் இனி வருங்காலங்களில் அகழ்வாய்வு செய்தால் தமிழ்க்குடிமகன்கன் எந்தெந்த ரகங்களில் குடிமகன்களாக இருந்துள்ளனர் என்பதை நீக்கமற அனைத்துவிடங்களிலும் மேற்பரப்பு ஆய்வு செய்தாலே அறிந்து கொள்ளலாம்.
உண்மையில் தற்போது சுவடிகள் ஆவணப்படுத்தல் பணியில் தமிழகமெங்கும் இலவசமாக தமிழ்நாடு சுவடிகள் ஒருங்கிணைப்புத்துறை செயல்படுகிறது. இதில் பணியாற்றும் நிரம்பப் பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்களாவே மாதம் 10 ஆயிரம், 15 ஆயிரம் பெறும் தற்காலிகப்பணியாளர்களாகவே உள்ளனர். தமிழக அரசில் ஒரு லட்சத்திற்கும் மேலாகக் காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொல்லியல் துறையில் மட்டும் மிக மிகக்குறைவான நபர்களே படிப்பதாலும், இது குறித்து விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும், மாணவர்கள் யாரும் படிப்பதில்லை எனவும் தெரிய வருகிறது.
இது தவிர்த்து மாணவர்கள் தொல்லியல் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும் நிலையில் அகழ்வாய்வுகள் அதிகப்படியாக செய்வதற்கும், கல்வெட்டுகள் அதிகப்படியாக படிப்பதற்கும் பயன்படும். இந்தியக் கல்வெட்டுகளில் 80 விழுக்காடு கல்வெட்டுகள் தமிழியில் இருப்பதாலும், 40 விழுக்காடுக்கும் குறைவான கல்வெட்டுகள் இன்னமும் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வறிஞர்களே வேதனைப்படுகின்றனர்.
இவையெல்லாம் தவிர்த்து இனி வரும் மாணவர்கள் தொல்லியல் துறையில் படிக்கவேண்டும். அவர்கள் படித்தால் அரசின் அருங்காட்சியகப்பணி, ஆலோசகர்பணி, புலனாய்வாளர் பணி, கற்பித்தல் பணி, ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப்பணிகள், ஆவணப்படுத்தல் நிபுணர் என பல்வேறு நிலைகளில் பணிகள் காத்துக்கொண்டிருக்கிறது. இனி வரும் சமூகம் தொல்லியல் துறையை மற்ற துறைகளைப் போல் ஆர்வமாகப் படிக்கும் சமூகமாக வளர வேண்டும். தொல்லியல் துறை படிப்பதற்கு இந்தியாவில் புனே டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கிரேட்டர் நொய்டா தொல்லியல் நிறுவனம், மெட்ராஸ் பல்கலைக்கழகம். காந்தி நகர் ஐஐடி, குவாலியர் சிவாஜி பல்கலைக்கழகம். குருஷேத்ரா பல்கலைக்கழகம். பரோடா பல்கலைக்கழகம், சண்டிகர் பஞ்சாப்பல்கலைக்கழகம்,தில்லி பாரம்பரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நீங்கள் சேர்ந்து படித்துத் தொல்லியல் பெற உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வாழ்த்துகளுடன் பதிவு செய்கிறேன்.
வி..கே.சிவகுமார்,
செயலாளர்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்.
Comments
Post a Comment