ஜிலோப்பநாயக்கன்பாளையம் ஆனந்தன் ராமசாமி அவர்களுக்கு நூல்கள் பரிசளிப்பு
ஜிலோப்பநாயக்கன்பாளையம் ஆனந்தன் ராமசாமி அவர்களுக்கு நூல்கள் பரிசளிப்பு
உடுமலை வட்டம் செலவநாயக்கன்பட்டி எனும் ஜிலேப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர். தற்போது கோவையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிக்கொண்டு கல்விப்புலத்திலும், சமூகப்புலத்திலும் தொண்டாற்றி வரும் பெருந்தகை.
அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி குழந்தைகளை இஸ்ரோ அழைத்துச்சென்ற அறிவியல் ஆளுமை.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் திரு. குமாரராஜா அவர்களின் குடும்பத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். மரபுக்கவிஞர் குமாரராஜா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் பதிந்த சுவடுகள் நூலினைக் கேட்டிருந்தார்.
அதனோடு உடுமலை வரலாற்று நூல்களை அஞ்சலில் அனுப்பி வைக்கக் கோரியிருந்தார். நமதூர்க்காரர் என்பதால் நேரில் சந்தித்து வழங்குங்கள் எனும் தலைவரின் ஆலோசனைப்படி நேரில் சந்தித்துப் பேசினோம்.
ஜிலேப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மாலகோயில் குறித்தும், திருமூர்த்தி மலையில் வைக்கப்பட்டிருக்கும் தூண் கோபுரம் குறித்தும் விளக்கமாக கூறினார். தலைமுறை தாண்டி இறந்து போகும் பெரியவர்களுக்கு கல் வைக்கும் வழக்கம் இருந்ததையும் தற்போது அருகி வருவதையும் குறிப்பிட்டுக் கூறினார்.
தளி எத்தலப்ப மன்னரின் செவி வழிச் செய்திகளுக்கும் நாட்டார் வழக்காற்றியல் கதைகளுக்கும் உயிர் கொடுத்து நூலினை வெளியிட்ட முனைவர் இந்திரசித்து அவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆவணப்படுத்தி வெளியிட்ட முனைவர் மதியழகன் அவர்களுக்கும் இந்த அரும்பெரும் பணியைச் செய்திட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதிவுகளை தனியாக ஒரு யுட்யூப் சேனல் உருவாக்கி பத்திரப்படுத்தவும் வேண்டுகை வைத்தார்.
உடுமலை மண்ணில் பிறந்த மிகச்சிறந்த ஆளுமை ஆனந்தன் ராமசாமி அவர்களைச் சந்தித்து நூல்கள் வழங்கியது பேருவகை தரக்கூடிய நிகழ்வாக இருந்தது.
வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம்
நன்றி ஜிலோ ஆனந்தன் ராமசாமி அவர்களுக்கு
உடுமலை வரலாறு 01.09.2023

Comments
Post a Comment