விடுதலைப்போரில் தரணி போற்றும் தளி எத்தலப்பன்

 விடுதலைப்போரில்  தரணி போற்றும் தளி எத்தலப்பன்

தளி என்ற ஊர் கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது. இவ்வூர் 72 பாளையங்களில் ஒன்றாகும். எத்தலப்ப வம்சத்தினர் இவ்வூரில்  கோட்டைகள் கட்டி ஆண்டு வந்தனர். இவர்களைப்பற்றிய குறிப்புகள்  பின்வருமாறு: 

ஆதி முதல் பெனுகொண்ட விலிருந்து அதி வீரக்கம்பளம்  சோதி எனும் கயிலைகிரி வல்லக்கொண்ட சாமி பதம்  அனுதினமும் தொழுது போற்றி, மாதம் மும்மாரி பெய்து விளைவே பொங்க மகிழ்ச்சி உடனே விளங்கி வளரும் யோக நீதி முறை தவறாதபேர் என்னும் நிலைமை பெரும் கம்பளத்து நிபுணர்தானே, 

தளி  எத்தலப்பனின் முன்னோர்கள்  வல்லவர்களாகவும், ஜால  வித்தைகளில் சிறந்தவர்களாகவும் எப்பேர்ப்பட்டவர்களையும் அடக்குவதில் தீரர்களாகவும் விளங்கினர்.  இவ் வம்சத்தில் கடைசியாக ஆட்சி செய்த மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் மற்றும் அவரது சகோதரர் குமராண்டி வெங்கிடுபதி எத்தலப்பன் ஆகியோர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். எத்தலப்பனை வரலாற்று ஏடுகளில் 'யாதுல்' நாயக்கர் எனக் குறிப்பிடப்படுகிறது. 

இவர்கள் தெய்வ  பக்தி உடையவர்கள். சக்கதேவி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், கோட்டைப்பெருமாள் கோவில் முதலான கோவில்களை அமைத்து மராமரத்துப் பணிகளைச் செய்தனர். இவர்கள் எதிரிகளுக்கு முன்னால் ஆயிரம் பேர் நிற்பது போலத்தோற்றம் ஏற்படுத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வர். துப்பாக்கிக் குண்டுகள்  தங்களின் மீது படாமல் செய்து குண்டுகளை வெடிக்கச் செய்வதில் வல்லவர்கள் எனவும் கூறுவர். 

இவர்கள் அனைத்து சமுதாய மக்கள் மதிக்கும் வண்ணம் இறைவனுக்கு பூசை வழிபாடுகள் நடந்தேற நிலங்களை மானியமாக வழங்கியுள்ளனர். தளியின் அருகில் 'குளத்துக்காடு' என்ற குளத்தைத் தங்களின்  உபயோகத்திற்கு வைத்திருந்தனர்.

எத்தலப்பன் தகப்பனார் பெயர் மலையாண்டி வெங்கிடபதில  குலசேகர எத்தலப்பன். தாயார் பெயர் கமலத்தாய். மனைவி பெயர் வீரகாட்டம்மாள்.தளி பெரிய பாளையமாதலால் சிறிய பாளையங்கள் தளிக்குக்காணிக்கை செலுத்தி வந்தன.

தளி யாதுல நாயக்கர், ஆங்கிலேயரை எதிர்ப்போரை தனது நண்பர்களாகக் கொண்டிருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, திப்பு சுல்தான், மைசூர் கிருஷ்ணப்ப  நாயக்கர், விருப்பாச்சி கோபால  நாயக்கர்,  மணப்பாறை இலட்சுமி நாயக்கர் முதலானோருடன்  நேரடி தொடர்பு வைத்திருந்தார்.

யாதுல  நாயக்கரும் விருப்பாட்சி  கோபால நாயக்கரும் கன்னட நாட்டுடன் நெருங்கிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டனர். இதைப்பின்வரும் ஆங்கிலேய ஆவணம் உறுதிப்படுத்துகிறது. 


1797 ல் தளி யாதுல நாயக்கரும் மணப்பாறை இலட்சுமிநாயக்கரும் தங்களுக்குள் நெருக்கமான இணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர். இதுவே திண்டுக்கல் கூட்டணிக்குக் கருவாக அமைந்தது. 

திண்டுக்கல் கூட்டணித்தலைவர் கோபால் நாயக்கர் தனது பிரதிநிதி சோமநாத பிள்ளையைத் தளிக்கு அனுப்பி வைத்து ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிடுவது சம்பந்தமாக சில முக்கியமான தகவல்களைத் தெரிவித்தார். மங்கலம் பாளையக்காரர் தளிக்கு வந்து இவர்களுடன் கூட்டணியில் இணைந்தார். திண்டுக்கல் கூட்டணியில் தேவதானப்பட்டி பூசாரிநாயக்கர், தாராபுரம், காங்கேயம்,கொழுமம், சங்ககிரி, கரூர், கன்னிவாடி, ரத்தினகிரி நத்தம் மணப்பாறை கடவூர், இடையகோட்டை இராமகிரி பெரியபட்டி, மெட்ராத்த, மைவாடி துங்காவ தொண்டாமுத்தூர் தணிகைவாடிஅயோத்திபட்டி வேதம்பட்டி சோமன்துரை பாளையக்காரர்களும் இணைந்தனர். 

இவர்கள் மைசூர் மன்னர் திப்புசுல்தானைச் சந்தித்து இராணுவ  உதவி பெறவும், ஆங்கிலேயரை எதிர்க்கவும் ஆலோசனை செய்தனர். கோபால் நாயக்கர் பிரிட்டிசாருக்கு எதிராகப்போராட்ட ஏற்பாடுகளைச் செய்தார். சுதந்திர தாகம் கொண்ட குடிகளும், மற்ற தலைவர்களுக்கும் இது நம்பிக்கையை ஏற்படுத்தியது என சென்னை வருவாய் வாரியக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றது. 

தளியில், கோபால் நாயக்கர் தகவல்  தொடர்புகளுக்காக தனது பிரதிநிதியாக சோமநாத பிள்ளையை நியமனம் செய்தார். மற்ற பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காகத் திரண்டனர். இவர்கள் தங்களின் பிரதிநிதிகளாகத் தங்களின் வக்கீல்களை நியமனம் செய்தனர். இவர்கள் விருப்பாட்சியில் தங்கியிருந்து தகவல்களைப் பெற்று தங்கள் தலைவர்களுக்குத் தெரிவித்தனர்.  ஒன்றிணைந்த தலைவர்களின் பிரதிநிதியாக ஆறுமுகம் சேர்வைக்காரர் விருப்பாட்சி, கடவூர் இடையகோட்டைக்குச் சென்று தகவல்களைத் தெரிவித்தார். பாளையத் தலைவர்கள் ஒருவரையொருவர்  சந்தித்துக்கொண்டதுடன் இலட்சுமி நாயக்கருடன் ஆலோசனை செய்தனர். 

பாளையக்காரர்களின் செய்திகளைக்கூறவும் இராணுவ உதவிகளைப் பெறவும், திப்பு சுல்தானிடம் மணப்பாறை இலட்சுமி நாயக்கர் தூதராகச் சென்றார். 1799 ஏப்ரல்  4ல் திப்பு சுல்தானிடமிருந்து பரிசுப்பொருட்களுடன் திரும்பினார். 

யாதுல நாயக்கர் இந்தக் கூட்டணி பலமான இயக்கமாக ஆகப்பாடுபட்டார். இவர் கன்னடப்போராளிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். மருதுபாண்டியரும். கோபால் நாயக்கரும் தங்களின்புரட்சிக்குழுக்களை ஒரு பொதுவான அமைப்பில்  இணைத்துக் கொண்டனர். 

தமிழ்நாட்டில்  புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக்கு இந்த முக்கியமான நடவடிக்கை  போராளிகளின் ஒருங்கிணைப்பை அதிகரிக்கச் செய்தது.  ஆங்கிலேயர் 1799 அக்டோபர் 16 ல் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டதை அறிந்த தளி யாதுல நாயக்கர் மிகவும் வருத்தப்பட்டார். இதற்குப் பழி வாங்க வெண்டுமெனத் தீர்மானித்தார். பாளையங்கோட்டையல் சிறை வைக்கப்பட்டுள்ள ஊமைத்துரையையும்,செவத்தையாவையும் விடுதலை செய்ய விருப்பாட்சி கோபால் நாயக்கருடன் ஆலோசனைசெய்தார். 

இவர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் போராளிளுக்கு ஊமைத்துரையை விடுதலை  செய்ய ஆதரவு அளித்தனர்.

ஊமைத்துரை விடுதலை ஆன பிறகும், அவன் பாஞ்சாலங் குறிச்சியில் நடத்திய போருக்கு தளி யாதுல நாயக்கர் படை வீரர்களை அனுப்பிஊமைத்துரைக்கு ஆதரவு அளித்தார். அதன் பிறகு தளி பகுதியில்  போர்  தொடருவதற்கான சூழ்நிலை  ஏற்பட்டது.  தளி அரண்மனைக்கு வந்து வரி கட்டவேண்டும் என்று ஆணவத்துடன் கேட்ட ஆங்கிலேய  அதிகாரியைக் கைது செய்து தூக்கிலிடுமாறு ஆணையிட்டார். 

ஆங்கிலேயப்படை தளபதி இன்னிஸ்  துரை பாய்ச்சலூரில்  இருந்த புரட்சியாளர்களை விரட்டினார். இன்னிஸ் 1801 ஏப்ரல் 8 ல் விருப்பாட்சி திரும்பினான். இன்னிஸ் விருப்பாட்சி அருகில் உள்ள மலைகளில் புரட்சியாளர்கள் இருப்பதை அறிந்து கொண்டார். லெப்டிணென்ட் 'பிரைத்' என்பவனை பொள்ளாச்சிக்குப் படையுடன் அனுப்பி வைத்தான்.  அவன் அங்கிருந்த ஆனைமலை கோட்டை மற்றும் தளி கோட்டைக்கு மேல்புறம் உள்ள குன்றுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு படை வீரர்களுக்கு உத்தரவிட்டு  தப்பிச் சென்றவர்களில்   வழிகளைத் துண்டிக்குமாறு  கூறினான். 

இதன் பிறகு 1801 ஏப்ரல் 9 ல் யாதுல நாயக்கர் தன்னை வந்து பார்க்குமாறு  இன்னிஸ் கூறினார்.  ஆனால் புரட்சித்தலைவனான யாதுல  நாயக்கர் மறுத்துவிட்டார்.  அதன் பிறகு இன்னிஸ்  துறை எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.

'கீழ்ப்படிதல்  மூலமாக  உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் அழிவிலிருந்தும் அவமானத்திலிருந்தும் காப்பாற்றிக்கொள்ளலாம், இன்னும் காலமிருக்கிறது.  கீழ் படிய மறுத்தால் பேரழிவு ஏற்படும். உன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் நன்கு யோசி. விழக்கூடிய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் உன் தலையிலேயே விழும்' என்றார். 

உறுதியாக புரட்சியாளரான யாதுல நாயக்கர் சரணடைய மறுத்துவிட்டார்.

உறுதியாக நம்பிக்கையுடன் புரட்சியாளரான யாதுல நாயக்கர் ஆங்கிலேயரை எதிர்த்து விரட்டியடிக்க  வேண்டும் என்ற பொதுவான  லட்சியத்தில்   உறுதியாக நின்றார்.  1801 ஏப்ரல்   12 ஆம் நாள்  மாலையில்  தளிப்போர் நடைபெற்றுள்ளது. தளிக்கோட்டைதகர்த்து நொறுக்கப்பட்டது. ஆனைமலைக் கோட்டைப் பகுதியில் இருந்த பிரைத் தலைமையில்  போர் நடைபெற்றது. ஏப்ரல் 13  ல் புரட்சியாளர்கள் தங்கியிருந்த குன்றின் பகுதிகளைக் கண்டறிந்து அதன் அடிவாரத்தை அடைந்தான். யாதுல நாயக்கர் தலைமையில்  ஆன புரட்சிப்படை எதிரிகளைத் தாக்கியது.  பித்தளையால் ஆன 3 பவுண்டு பீரங்கிகளுடன்  புரட்சியாளர்கள் தாக்கினர். இருப்பினும் யாதுல் நாயக்கரில் முயற்சிகள் ஆங்கிலேயர் முன் பயனற்றுப்  போயின.  அதன் பின்னர் நடந்த மோதல்களில்  ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பிறகு போராளிகள் காடுகளுக்குள் பின் வாங்கிச் சென்றனர். அதன்பின்னர் ஆங்கியேர் ஜல்லிபட்டி, தொண்டாமுத்தூரைத் தாக்கிக் கைப்பற்றினர். போரில்  தோற்றவர்கள் சிதறுண்டு போனார்கள். மலையில் தங்கி பிரிட்டிசாரை எதிர்த்தயாதுல் நாயக்கர் ஆண்டியம்மா, பெரியபட்டி நாகம நாயக்கர் ஆகியோர் உட்பட பலர் மலைக்காய்ச்சல் தாக்கப்பட்டு மலையிலேயே இறந்தனர். 

மலைக்காய்ச்சலுக்குத் தப்பியவர்கள் சமவெளிக்கு ஓடினர். தளி யாதுல நாயக்கரின் மனைவி வீர காட்டம்மாள் தனது கணவர் இறந்து போன செய்தியறிந்து தீ வளர்த்த அதில்  விழுந்து சக ஆயத்தம் செய்தாள். செய்தி அறிந்த கோபால் நாயக்கர்  'மகளே, உன் தளி பாளையத்தை மீட்டு உன்னை தளி பாளையத்துக்கு ராணி ஆக்குகிறேன்' நீ சாகக்கூடாது என்றார் யாதுல்  நாயக்கரின் மனைவிக்கு கோபால் நாயக்கர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை.

நன்றி ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ..

உடுமலை சிவக்குமார் 

Comments