தேவராட்ட கலை
தேவராட்ட கலை
தேவராட்டம் என்பது தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் கலை வடிவம் ஆகும் . குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேட்டைத் தொழில் செய்து வந்த சமூகத்தினரில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்ற சடங்கு எனலாம். உருமிமேளம், பறைமேளம் ஆகியன தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைக் கருவிகளாக இருக்கின்றன.
தமிழகத்தில் உடுமலைப்பேட்டை திருப்பூர் ,கோவை ,ஈரோடு திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக் கலை அதிகமாகக் காணப்படுகிறது.
தேவராட்டத்தில் எட்டு முதல் பதின்மூன்று பேர் ஆடவேண்டும் என்பது பொது மரபாக இருந்தாலும் ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. நூறு பேர் கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின் போது ஆண்கள் ஒப்பனை செய்து கொள்வதிலை. அண்மைக் காலமாக இக்கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அச்சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்குக் காணப்படுகிறது.
இடையில் சாதாரணமாக உடுத்தும் வேட்டி, கைகளில் சிறிய துணி, கால்களில் சலங்கை, தலையில் தலைப்பாகை, சலங்கை மணிகளை நீளமாக நூலில் கோத்துக் காலில் கட்டிக் கொள்கின்றனர்.
இவ்வாட்டத்தில் பாடல்கள் பாடப்படுவதில்லை. இசைக்குத் தகுந்தாற்போல் ஆடும் ஆட்டமாக உள்ளது. உறுமி என்னும் இசைக் கருவி இந்த ஆட்டத்தின் போது இசைக்கப்படுகிறது. இதனைத் ‘தேவதுந்துமி’ என்று கம்பளத்து நாயக்கர் அழைப்பர். இக்கருவி வேங்கை மரத்தில் செய்யப்படுகிறது. நடுவில் குறுகியும் ஓரங்களில் பருத்தும் காணப்படும். ஆட்டிக்குட்டியின் தோலைப் பயன்படுத்தி இக்கருவியை உருவாக்குகின்றனர். இடப்பக்கத் தோலில் வளைந்த நொச்சி குச்சியை அழுத்தி இழுத்து ஓசை எழுப்புவர். வலப்பக்கத் தோலில் வளைந்த விராலி அல்லது புரசன் குச்சியைப் பயன்படுத்தி அடித்து ஒலி எழுப்புவர்.
இவ்வாட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. தேவராட்டத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடலசைவுகளைக் கவனித்து அவனைப் பின்பற்றி ஆடுவார்கள். தேவராட்டத்தில் இருபத்தி மூன்று ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுவர். நிலுடிஜம்ப்பம், சிக்கு ஜம்ப்பம் என்பன போன்ற பெயர்களால் ஆட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுக்கள் மாற்றமடைகின்றன.
தேவராட்டத்தில் பதினெட்டு அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் என்று கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன் மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் ஆறு சப்தக் கூறுகளை உடையவை. ஒவ்வொரு அடவும் தனித்தனியே ஆடப்படும் போது இந்த ஆறு ஒலிக் கூறுகள் மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இக்கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.
Comments
Post a Comment