கரைவழியில் உளுந்து சாகுபடி
கரைவழியில் உளுந்து சாகுபடி
கரை வழி நாடு எனும் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கடத்தூர் போன்ற பகுதிகளில் மூன்று போகமும் ஆண்டு முழுமைக்கும் நெல் சாகுபடியே இருந்தது. காலப்போக்கில் நீராதாரக் குறைவின் அடிப்படையில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் மாறி விவசாயமும் மாறிவிட்டது.
தற்போது கரைவழியில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லாமல் இரு போகத்திற்கே தடுமாற்றமாக இருப்பதாக கரைவழி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஊடு பயிர்களாக உளுந்து, வெண்டை, தட்டப்பயிறு, வெத்திலை எனும் பணப்பயிர்களை ஊடுபயிர்களாக பயிர் செய்து அறுவடை செய்து வருகின்றனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் கரைவழி நாட்டின் வேளாண்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் கூறியதாவது, உளுந்து விவசாயம் என்பது குறைவான முட்டுவலி போட்டு பயிர் செய்தால் இரண்டு மாதங்கள் அல்லது 70 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். உளுந்தில் கருப்பு உளுந்து வெள்ளை உளுந்து என்பதெல்லாம் இல்லை. எடுக்கும்போது கருப்பு உளுந்தாகவும், அதன் தோலை உரித்தால் வெள்ளை உளுந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதிருக்கும் சூழ்நிலையில் உளுந்தைப் பபிராக்கி காட்டிலிருந்து களத்திற்குக் கொண்டு வருவது பெரும்பாடாக இருப்பதாகவும், சுண்டக்காய் காற்பணம் சுமை கூலி முக்காப்பணம் எனும் வட்டார வழக்கிற்கேற்ப இன்றைய கூலியாட்களுக்கு குறைந்தது 350 முதல் 650 வரை கொடுத்தால் கட்டுப்படியாவதில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும், மருந்து தெளிக்காமல் உளுந்து சாகுபடி செய்வது இயலாது. இந்த மருந்துகளுக்கும், ஆட் கூலிகளுக்கும் செலவு செய்து களத்திற்கு கொண்டு வந்தால் ஒரு ஏக்கருக்கு 6 அல்து ஏ மூட்டைகள் வருவதே சிரமம். தற்போது கரைவழியில் இரண்டாம் போகத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டதால் விரைந்து சாகுபடி செய்யவேண்டியதாகி விட்டது இன்னமும் 10 நாட்கள் காட்டில் அதாவது முழுமையாக உளுந்து வெடிக்கும் அளவுக்கு காட்டிலே விடுத்து புடுங்கியிருந்தால் கொஞ்சம் வருவாய் இருக்கும் என்றும் கரை வழி விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகளுக்கு இலாபம் வந்தாலும் நட்டம் வந்தாலும் நாங்கள் இத்தொழிலைத் தொடர்ந்து செய்வதால் எங்களுக்குப்பழக்கமாகி விட்டது. இதில் போனால் அடுத்த வெள்ளாமைகளில் எடுத்துவிடுவோம் என்று இயல்பாகப் பேசுகின்றனர்.
கரைவழியை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மக்களும் ஜீவனம் நடத்துவதை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment