சூன் 24, 25 சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் திருச்சி , தஞ்சாவூர் சென்று வந்த நிகழ்வுகள் மற்றும் நினைவுகளின் தொகுப்பே, இந்தக் கட்டுரை.
சூன் 24, 25 சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் திருச்சி , தஞ்சாவூர் சென்று வந்த நிகழ்வுகள் மற்றும் நினைவுகளின் தொகுப்பே, இந்தக் கட்டுரை.
வழக்கமாக தலைவர் அய்யா திரு. குமாரராஜா அவர்கள்தான் இது போன்ற பயணக்கட்டுரை எழுதவேண்டும் என எழுதவைத்தவர். அதனால்தான் இந்தப்பயணமும் பதிவு செய்யப்படுகிறது. சரி பயணத்திற்கான தொடக்கம்.
திருச்சியில் ஆட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு பண்பாட்டுப் பயணம் எனும் நூலை வாங்கிக்கொண்டு அப்படியே தஞ்சாவூர் சென்று வரலாம் எனவும் சனி இரவு மணிவண்ணன் வீட்டில் தங்கலாம் எனவும் சிவாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
பண்பாட்டின் பயணம் நூலைப்பெற்றுக்கொண்டு உடுமலை திரும்பலாம் என்று யோசித்தபோதுதான் வீட்டில் துணைவியார் மருத்துவ அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எங்கும் செல்லவில்லை. எனவே, அவருக்கு ஒரு மன மாறுதல் தரவும், வழக்கம்போல் அறிவரசியும் அழைத்துக்கொள்ளலாம் என சிவாவும் பேசிய போது, கடைசி சனிக்கிழமை சரி போயிடலாம் என்று முடிவெடுத்தோம்.
வழக்கம்போல் சில சில சிக்கல்கள் இருந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு பேசி முடிவெடுத்த பிறகே சனிக்கிழமை காலை 7 மணியளவில் சிவா கிளம்பி வந்தார். 8 மணிக்கு கிளம்பும்போது சாப்பாடு இங்கே சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என இல்லாள் கூற சிவாவும் சரியென்றார். 7 மணிக்கே கிளம்பி உடுமலை வந்து சாப்பிட்டு செல்வதாகத் திட்டம். சரி என்ன செய்ய,
அடுத்து எட்டு பத்துக்கு மலையாண்டிபட்டணத்திலிருந்து கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, சாளரப்பட்டி வழியாக சர்க்கரை ஆலை எதிர்புறம் உள்ள பெட்ரோல் பங்கில் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு வண்டி கிளம்பியது. 8.35
முதலில் பொன்னர் சங்கர் கோயில் எனப்படும் வீரப்பூர், மற்றும் படுகளம், வையம்பட்டி கோயிலுக்குச்சென்று அப்படியே திருச்சி செல்லலாம் எனத் திட்டமிடலோடு வண்டி சென்றது. சரி போகும் போது தாழையூத்து வழியாக மணப்பாறை வரை செல்லலாம் என எண்ணினோம். சுரி தஞ்சை மணிவண்ணன் தங்கை வீட்டுக்குச் செல்வதால் பழனி பஞ்சாமிர்தம் வாங்கிச் செல்லலாம் என்று பழனி சென்று பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு வாகனம் சென்றது. வழியில் ஆயக்குடியில் கொய்யாக் காயும், வாங்கிக்கொண்டோம்.
விருப்பாச்சி வழியே முதன்மைச்சாலையில் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் ஏறி திண்டுக்கல் சென்று மேம்பாலம் அருகில் வடக்கு நோக்கி சென்று மேம்பாலத்தின் கீழே திருச்சி செல்லும் போது வழி தடுமாறிக் கேட்டுக்கொண்டே மீண்டும் பயணம் தொடர்ந்தது.
சிவாவின் இயல்பான வாகன வேகத்தோடும், திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே பேசிக்கொண்டே வாகனம் சென்றது. டோல்கேட் தாண்டி வையம்பட்டி செல்லும்போது மணி 1.11 சரி கொஞ்சம் விரைவாகச் செல்லலாமே எனச்சொல்வதற்கு முன்பே அதெல்லாம் அப்படித்தான் என சிவாவுடன் அறிவும் வீட்டம்மாவும் பேசிக்கொண்டே வையம்பட்டி மேம்பாலத்திலிருந்து சென்றது.
அதிலிருந்து மீண்டும் 17 கி.மீ, பொன்னர் சங்கர் பிறந்த இடமான பொன்னி வளநாடு எனும் பகுதி சரி வந்தாச்சு என்ன பேச, என்று நினைத்துக்கொண்டே இன்னொரு பைபாசும் வந்தது. அதனுள் கேட்டுக்கொண்டே செல்லும்போது ரயில்வே கதவை அடுத்து இடப்புறம் செல்வதற்கு பதிலாக நேராகச் சென்று மீண்டும் திரும்பி வந்த அந்தபாதையில் பயணித்தோம்.
பெட்ரொல் பங்க் அருகில் திரும்பவேண்டும் என்று சொன்னது நினைவு வந்ததும் மீண்டும் அதிலிருந்து திருப்பி ஒரு 10 கி.மீ, ஆம் புதுக்கோட்டை மாவட்டம் வந்துவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி திண்டுக்கல் மாவட்டம் முடிந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் நுழைந்தோம். ஏற்கனவே கடந்த சூலை 15, 16 சென்றதும் நினைவுக்கு வந்து சென்றது. சரி பாதை குறுகலான, ஒரு வழிப்பாதையாகவே சென்றது. அங்கு முழுமையாக விவசாயமாக இருந்தாலும் நமது பகுதி போன்று பணப்பயிர் செய்யும் விவசாயிகள் குறைவாகத்தான் இருப்பதாகத் தெரிந்தது. நீர் வளமும் அந்தளவிற்கு இல்லை.நாம் போகும் முந்தைய நாள் மழை பொழிந்துள்ளது. எனவே ஆங்காங்கு பச்சை பசேல் என மரம் செடி கொடிகள் தெரிந்தது.
வையம்பட்டி முதல் பொன்னி வளநாடு வரையிலான ஊர்கள் ஆர்.எஸ்.மணியகாரம்பட்டி, காவல்காரன்பட்டி, ஆசாத் ரோடு, பன்னப்பட்டி, கன்னிராஜம்பட்டி, முத்தலைவர்பட்டி, சின்னக்காம்பட்டி,வலையோர்கான்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பனப்பட்டி, ராஜாபட்டி,
அடுத்து பொன்னிவளநாடு எனும் பொன்னர் சங்கர் பிறந்தகம் பார்த்தோம். அது நான்கடந்த 2008 க்குப்பிறகு நல்ல வளர்ச்சி என்று சொல்லவிட்டாலும் ஓரளவிற்கு வளர்ச்சி அதுவும் சிற்றூர்ப்பகுதிகள். அங்கு சுமார் 5 ஏக்கர் சுற்றளவில் அரண்மனை இருந்ததாகவும், பொன்னர் சங்கர் சண்டையில் அவர்களது குடும்பமே இறந்துபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொன்னர் சங்கரின் பெற்றோர் குன்னுடையாக் கவுண்டர் தாமரை நாச்சி க்குப்பிறகு பொன்னர் சங்கரின் மனைவி மார்கள் முத்தாயி, பவளாயி பொன்னர் சங்கர் இறப்பைக் காண வராத வருத்தத்தில் தங்கை தங்காயி அந்த அரண்மனை எரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எப்படியிருப்பினும் அங்கு அரண்மனை இருந்ததற்கான சுவடுகள் ஒரு துளிகூட இல்லை. ஒரு சில கற்கள் மட்டுமே ஆங்காங்கு தெரிகிறது. பொன்னர் சங்கர் பெற்றோருக்கும், வீரபாகு எனும் தளபதிக்கும் சிலை வைக்கப்பட்டது.
கோயில் பார்ப்பனர்களால் பூஜை செய்யப்படுவதில்லை. கவுண்டர்கள் செய்யப்படுகிறது. விபூதி, குங்குமம் பிரசாதமாகத் தருகின்றனர். பூசாரிகள் தட்ல போடுங்க, தட்ல போடுங்கே என கட்டாயக் காணிக்கை வாங்குகின்றனர்.
கோயிலுக்கு முன்பறும் பெரிய பெரிய குதிரை சிலைகள் அதற்கருகில் பொன்னர், சங்கர், தாமரை நாச்சி, குன்னுடையாக்கவுண்டர், தங்காயி ஆகியோரது உருவ பொம்மைகள் சிறப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு இடது பக்கம் கடைசியில் இந்த ஐவரோடு சேர்த்து வீரபாகு, சாம்புவன், இவர்களோடு விநாயகர் சிலையும் வைக்கப்பட்ட பக்தி மேல்நிலையாக்கம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கவுண்டர் சமூகத்தினர் இவர்களைக் கடவுளாக வழிபடுகின்றனர். ஒட்டன்சத்திரம் முதல் பழனி, மடத்துக்குளம் , உடுமலை, கோவை, தாராபுரம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், வெள்ளகோவில் என சேலம் வரைக்கும் கவுண்டர்களே அதிகம் இருப்பதும் இந்த பொன்னர் சங்கர் எனும் பெயரில் கோவில்கள் அமைத்து வழிபாடு செய்வதும் இ;நத 19 , 20 ஆம் நூற்றாண்டில் மிகவும் அதிகமாக உள்ளது.
மற்ற சமூகத்தினர் இவர்களை வழிபட்டாலும் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்யும் அளவிற்கு இல்லை யெனலாம். இருப்பினும் ஒரு சில விதி விலக்குகளோடு அருந்ததியர், குயவர் என்போரும் பொன்னர் சங்கர் கோயில்களைக் கட்டி வழிபாடு செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டதுண்டு.
சுமார் 15 நிமிடம் மூன்று கோயிலை பார்த்து கிளிபிடிக்கும் மரத்தையும் குளத்தையும் பார்த்து ஒரு சக்கரையில்லாத டீ, சிவாவுக்கு வரக்காபி அறிவுக்கு லெமன் சூசும் பருகிவிட்டு வாகனம் எடுக்க 1.30 அடுத்து வீரம்பூர் எனும் பெரியகாண்டியம்மன் கோயிலுக்குச் செல்ல மீண்டும் பைபாஸ் தாண்டி மணப்பாறை ஊருக்குள்வந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் புகுந்து ஏற்கனவே நாம் வந்த வழியே வரும்போது சுமார் 15 கி.மீ அதிகமாகத்தான் இருக்கும். மணப்பாறை ஊருக்குள் வந்து திண்டுக்கல் ரோட்டில் எதிர்புறமாக வந்து சந்தைக்கு அருகில் முதன்மைச்சாலை குறுக்கே வந்து வீரப்பூர் நோக்கி வாகனம் சென்றது.
வழியில் வலசுப்பட்டி, மணப்பாறை அடுத்து அமைப்புறம், தேனிமலைப்பட்டி, நவகிணத்துப்பட்டி, பூசாரிபட்டி அடுத்து வீரப்பூர், மணப்பாறையிலிருந்து சுமார் 12 கி.மீட்டர். உள்ளே சென்று வழிபட்டு பிறகு வெளியே வந்து அலுவலகத்தில் தலபுராணம் கேட்க, அவர்களோ, இல்லை எனச்சொல்லாமல் பக்கத்தில் மளிகைக்கடையில் வாங்கிக்கோங்கோ என்று சொன்னதும், இல்லீங்க இந்தக் கோயில் தலபுராணம் எனச்சொல்லியும் யாருக்கும் விளங்கவில்லை. என்ன செய்ய? மீண்டும் கடையில் சென்று கேட்க அவர்களே பழனிசாமியில் நாட்டுப்புறப்பாடல் புத்தகம் கொடுத்தனர். தல வரலாறு எனக்கேட்டால் அவர்களுக்கு ஏதோ புத்தகம் என்றுதான் தெரிகிறது. தல வரலாறு பற்றி அலுவலகத்தில் இருப்போருக்கும் தெரியவில்லை. பக்கத்து கடைக்காரர்களுக்கும் தெரியவில்லை.
சரி அங்கிருந்து நேர் கிழக்கே 7 கி.மீட்டரில் படுகளம் பார்க்கலாம் என அங்கிருந்த வாகனம் கிழக்கு நோக்கி சென்றது. பெரும் வறக்காடாக இருந்தது. விவசாயம் என்பது வாசனைக்குக் கூட இல்லை என்பது அங்கிருக்கும் மக்கள் மண்ணைப்பார்த்தாலே ஓரளவிற்குத் தெரிகிறத.
1.50 க்கு இறங்கி சுமார் 2.14 வரை அங்கிருந்து வாகனம் படுகளம் நோக்கிச் சென்றது. கடுமையான வெயில் இந்தக் கோயில் மட்டுமே கோயில் தோற்றத்தில் இருப்பதாக எனது மனைவிகூறினார். இந்த இடத்தில் தான் பொன்னரும் சங்கரும் இறந்துபட்டார்கள் என்று சொன்னதும் அறிவரசி எப்படி நம்பறது எனக்கேட்க அப்படியே கோயில் பூசாரியிடம் சென்று சொல்ல அவரும் வழிவழியாக காலங்காலமாக முன்னோர்கள் சொன்னது என்றும் இவ்விடத்தில் மூர்ச்சையாகி விழுந்தால் மீண்டும் எழுந்திருப்பார்கள் எனவும் கூறினார்.
ஆம், படுகளம் நிகழ்வில் இந்தத் திருவிழா நிறைவு நாளில் இந்தக் கோயில் வளாகம் முழுமைக்கும் ஆயிரக்கணக்கில் மக்கள ;கூடுவார்கள். ஒரே இரவில் பதினொரு மணிக்குமேல் கிழே விழும் அனைவரும் அதிகாலை மூன்று மணிக்கு இயல்பாக தூங்கி எழுவது போல் எழுகிறார்கள். அப்பொழுது தங்காயி போல் ஒரு சிறு மாணவி வந்து தண்ணீர் தெளிப்பார். யாரென்று முன்னமே தெரியாது. வந்த கூட்டத்தில் ஒரு சிறுமியாக இருப்பார். இந்த நிகழ்வு இன்றளவும் நடைபெறுகிறது.
ஏற்கனவே 2008 , 2009 இல் சீதாராமன் ஆய்வேடுக்காக புதியதாக கேமரா வாங்கி இந்த சுவற்றில் மேல் அமர்ந்து படம் எடுத்ததும் நினைவுக்கு வந்தது. இப்போது சீதாராமன் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். இந்த உடுக்கையடி பொன்னர் சங்கர் பாடல் வழியாக. பெரிய அளவில் பணமும் சம்பாதித்துவிட்டார்.
இன்று மீண்டும் அதே இடத்தில் எனது மனைவி மகள் நண்பர் சிவாவுடன் படம் எடுத்துக்கொண்டு அப்பொழுது வந்த வழி தோகை மலை முதன்மைச்சாலைக்கு சென்று அப்படியே திருச்சி செல்ல வழி இருந்தது. அந்தப்பாதை இன்னமும் அப்படியே இருக்கிறது. ஆண்டுகள் 15 ஓடினாலும் அந்தப்பாதைகள் மாறவே இல்லை. ஊரும் அமைப்பும் மாறவே இல்லை. அங்கிருக்கும் அர்ச்சகர்கள் நிலைமையும் மாறிவிட்டது. அருகில்தங்காயி நீர்க்குளம். இந்தப்போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களில் தங்காயி சொன்னதாக அன்னந்தண்ணி இருக்காது அண்டங்காக்கா பறக்காது எனும் சொல்லுக்கேற்ப காகம் பறக்காமல் இருந்தது. ஆனால் இன்று காகம் பறந்ததை பார்த்தேன். கடுமையான மொட்டை வெயில். இங்கு சிவாவுக்கு ஆண்டிசாமி எனும் நண்பர் கிடைத்தார் வெகுநேரம் கோயில் வளாகத்தில் பேசிவிட்டு அழைத்த பிறகே வந்தார்.
அருகில் இருக்கும் மலைக்குன்றுகள் உடைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தள்ளது. மலைகள் உடைக்கப்பட்டு வருவது பக்தியின் பரவசத்தால் அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை போலிருக்கிறது. பொன்னி வளநாட்டிலும் , வீரப்பூரிலும். இங்கே படுகளத்திற்கு அருகில் அந்தக் கவுண்டர் சமூக மக்கள் வசிப்பதில்லை எனத்தெரிகிறது. இதே கேள்வியை எனது மனைவி கேட்க, கவுண்டர்கள் இருந்தால் அவ்விடத்தில் விவசாயம் செழிக்கும். உடல்உழைப்பினால் மண் மேடுகள் சரியாக்கப்பட்டு விவசாயம் செழித்திருக்கும் என்று சொன்னேன். அவ்வாறே மணப்பாறை முதல் வீரப்பூர் வரையிலும் ஒரு சில இடங்களில் நெல் விவசாயம் நடந்தது. ஆனால் வீரப்பூர் முதல் படுகளம் வரை இன்னமும் வெறும் காடாகவே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இவ்வாறு இருக்க வாய்ப்புகள் இல்லை.
படுகளத்திலிருந்து மணப்பாறை திருச்சி முதன்மைச்சாலைக்கு வரும் முன்பே காலையில் வீட்டிருந்து கொண்டு வந்த எலுமிச்சம் சோறு வாகனத்திலேயே அறிவு சாப்பிட்டாள். மணப்பாறை பிரிவில் சப்பாத்தி சாப்பிட்டோம். சிவா அவரது பங்கிற்கே ஆம்லெட் ஒன்று பில்லு 90 அதற்கு முன்பே மணப்பாறை முறுக்கு வாங்கி சாப்பிட்டுவிட்டு, தஞ்சை மணிவண்ணனுக்கும் ஒரு பார்சல் வாங்கிக்கொண்டனர்.
வண்டி திருச்சி நோக்கி சென்றது. நல்ல வெயில் அடுத்து நறியன்களம், காலதுபட்டி, அஞ்சைக்களம், குன்னுடையான்பட்டி, (குன்னுடையாக்கவுண்டர் பொன்னர் சங்கர் தகப்பனார்) கோட்டம்பட்டி, கரையாம்பட்டி, சித்தநத்தம், இனாம் குளத்தூர், வெண்ணாங்குளத்தூர் இவ்விடத்தில் ஒரு குளம் இருந்ததாகவும், அந்தக்குளத்தில் சங்கர், வீரசாம்புவன் உத்தரவுப்படி உள்நீச்சலில் உள் சென்று வெளி நீச்சலில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு நீருக்குள் சென்ற போது சண்டை நடந்ததாகவும் ஆய்வேட்டில் தட்டச்சு செய்த நினைவு. எனவே, இந்தக்குளத்தை சென்று நேரில்பார்த்தோம். அதே போல் ஏராளமான சுவடுகள் ஆய்வேட்டில் 280 பக்கம் அடித்துக்கொடுத்தேன்.
சரி, மாலை 5 மணிக்குத்தான் நூல் வெளியீட்டு நிகழ்வு அதற்குள் வருவதற்காக ஸ்ரீரங்கம் சென்றோம். 4 மணிக்கு ஸ்ரீரங்கம் சென்று கடுமையான வெயிலில் செருப்பை வெளியே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் வரவில்லை எனக்கூறி கோயிலைச் சுற்றிப்பார்க்க சென்றுவிட்டேன். வெறும் காலில் கடுமையான வலி. 4.45 க்கு வீட்டம்மா தொலைபேசி வாங்க போகலாம் என்னாச்சு எனக்கேட்க கூட்டம் வரிசையில் நின்னா மீட்டிங் போகமுடியாது என்று சொன்னதும் பரவாயில்லை எனநினைத்து செருப்புக் கடைக்கு வருவதற்குள் கடுமையான வலி. வடக்கு கோபுரவாசலிலும், கிழக்கு கோபுர வாசலிலும் பார்ப்பனர்கள் வாகனத்தில் வந்திறங்கி கோயிலுக்குள் வருகின்றனர்.
பெரும்பாலும் ஊருக்குள் கோயில் இருக்கும். ஆனால் ஸ்ரீரங்கமோ, கோயிலுக்குள் ஒரு மிகப்பெரிய ஊரே இருக்கிறது. என்பதை நேரில்பல முறை பார்த்தாலும் இன்னமும் முழுமையாக பார்க்கவில்லை.
கோபுரத்திற்கு அருகில் படம் எடுத்துக்கொண்டோம். கோயிலுக்குள்ளும் படம் எடுக்கப்பட்டது. சரி வந்த வழியில் செல்லாமல் மாற்று வழியில் செல்லலாம் எனக்கூறி கூகுள் உதவியோடு அஜந்தா உணவகம் செல்ல வழிபோட்டாள் அறிவு. ஆனால் இயலவில்லை; அதற்குள் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்றம் சத்திரம் பேருந்து நிலையத்தில் புகுந்து மத்திய பேருந்து நிலையம் வருவதற்கு 6. 15 ஆகிவிட்டது. கூட்டம் நடந்துகொண்டிருந்தது. சரி என்ன செய்ய கூட்டம் முடியற வரைக்கும் காத்திருப்போம் எனக் காத்திருக்கு மணிவண்ணன் தொலைபேசி 'என்னங்கன்ணா வந்தீட்டிங்களா' எனக்கெட்ட நிலைமையைச் சொல்ல, சற்று சங்கடத்துடன் அதுதான் முன்னமே நான் வரச்சொன்னேன். பாலகிருஷ்ணன் 4 மணியிலிருந்து இங்கேதான் இருக்காரு, முன்கூட்டிய வந்திருந்தால் அவருடன் கொஞ்சம் பேசியிருக்கலாம். பரவாயில்லை. சரி என்று கூட்டம் கேட்டிக்கொண்டிருக்க, தஞ்சையிலிருந்து மணிவண்ணன் தங்கை 'ஏன்னா, எப்பொ வருவீங்க. , இப்போ மணி 7 கண்டிப்பாக 9 மணிக்குள் வந்துவிடும். நந்தலாலா, முப்பது நிமிடம் எஸ்.ராமகிருஷணன் 50 நிமிடம் 7.45 பாலகிருஷ்ணன் 15 நிமிடம் 8 மணிக்கு முடிந்தது. நல்லதொரு ஏற்பாட்டு நிகழ்வு களம் அமைப்பு சிறப்பாக செயல்படுவதாகச் சொன்னார்கள். வேள்பார் இவர்கள்தான் செய்தார்கள்.
7 மணிக்கே சிவா புத்தகம் வாங்கி வந்துவிட்டார். 112 புத்தங்களும் விற்பனை ஆகிவிட்டது. சுமார் ரெண்டேகால் லட்சம் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகை திருச்சியில் சாத்தியமே. நல்லதொரு அமைப்பு, நல்லதொரு நிகழ்வு, நல்லதொரு ஏற்பாடு, சிவா வாங்கும் போது புத்தகம் இல்லை. இருப்பினும் நிகழ்வு ஏற்பாட்டாளர் உடுமலையிலிருந்து வந்ததை அறிந்து கொடுத்து உதவி உள்ளார். (பணம் பெற்றுக்கொண்டுதான்)
கூட்டம் எட்டு மணிக்கு முடிந்ததும் நேராக பாலகிருஷ்ணனிடம் பேசிய போது உடுமலையிலிருந்து வர்றீங்களா, வாங்க, வாங்க என்றார். இது போன்று நிகழ்வு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்ன போது, சூலையில் இயலாது ஆகஸ்டில் செய்யலாம் என்றார். மிகவும் சிரித்த மனதுடன், உடுமலை வரலாறு புத்தகம் கொடுத்த போது உடுமலைக்கே வரலாறு எனக்கேட்டுப் பெற்றுக்கொண்டார். அவரது புத்தகத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்தார்.
அடுத்து எஸ்.ராவுக்கு உடுமலை வரலாறு கொடுத்து படம் எடுத்துக்கொண்டோம். சங்கரவேலு பெயர் சொன்னதும் அவர் கவனித்தார். நூலைப்பெற்றுக்கொண்ட படம்எடுத்து மீண்டும் அறிவுடன் பாலகிருஷ்ணன் அவர்களுடன் படம் எடுத்து வெளியே வர மணி 8.10. தஞ்சை எப்படி செல்ல வேண்டும் எனக்கேட்டு, வெளியில் வந்து புதுக்கோட்டை வழியாகச் சென்று, மீண்டும் திரும்பி வந்து மேம்பாலம் பால்பண்ணைக்கு அருகில், மேம்பாலம் ஏறி இறங்கஅப்போல்லோ மருத்துவமனை அருகில் சர்வீஸ் ரோடு அதில் நேராக தஞ்சைதான். சுரி வாகனமும் அவ்வாறே மாறி வந்து நேராக வந்து தஞ்சை நோக்கி வாகனம் சென்றது.
இன்று எப்படியோ நினைத்த செயல் அனைத்து நிகழ்ந்தேறிவிட்ட மனநிறைவில் ஒரு பண்பாட்டின் பயணம் எனும் மனநிறைவோடு குடும்பத்தின் பயணம் தொடர்கிறது.
8.25 க்குத் தொடங்கிய பயணம், தஞ்சைக்குப் பல்வேறு வாகனங்களின் ஊடாக எங்களது வாகனமும் ஊர்ந்து சென்றது. (சிவா மெதுவாகவே ஓட்டினார்) இரவில் ஊரின் பெயர்களும் தெரியவில்லை. மக்களும் தெரியவில்லை. தஞ்சை செல்லும் வழியில் கந்தர்வகோட்டை, வல்லம் எனும் பெயர்கள் வந்து சென்றது. இதனுடைய வரலாறுகள் மிகப்பெரியது.
9.40 க்கு பேருந்து நிலையம் அருகில் ஏற்கனவே சென்ற வீட்டுக்கு முன்புற வீதியில் வீடு இருந்தது. மணி வந்திருந்தார். முதன்மைச்சாலையில் இருந்து ஒரே ஒரு திருப்பம். மீனாட்சி மருத்துவமனை அவர்கள் இல்லம் வந்தது.
நன்றாக உபசரித்தார் மணிவண்ணன் தங்கை. சிற்றுண்டி முடிய மணி 10.30 இரவு11 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். காலையில் விடிவதற்கு முன்பே மணிவண்ணன் தமது அலுவல்களுக்காகச் சென்றுவிட்டார்.
ஆறு மணிக்கு எழுந்ததும், அனைவரும் குளித்து சுவையான சிறப்பான சிற்றுண்டி சாப்பிட மணி எட்டு. 8.10 க்குக் கிளம்பி தஞ்சைப் பெரிய கோயில், சுற்றி வந்து பார்த்துக்கொண்டிருந்த போது மறக்காமல் தலைவர் திரு. குமாரராஜா அவர்கள் அழைத்தார். அவர் நின்று படம் எடுத்த இடத்தில் நாங்களும் நின்று எடுத்துக்கொண்டோம். மறக்காமல் திருவையாறு போகச்சொன்னார். சரி என்று கோவிலை விட்டு வெளியே வர மணி அரண்மனை போகலாமா? ராஜராஜன் மணி மண்டபம் போகலாமா என்று வாக்குவாதத்தில் அரண்மனையே வென்றது.
கோயிலிலிருந்து அரண்மனைக்கு மேற்கு நோக்கி சென்று அதிலிருந்து வடக்கில் திருவையாறு செல்லும் சாலையில் பேருந்து நிலையம் அருகில் சென்றால் அடுத்து ஒரு கிலோ மீட்டரில் அரண்மனை வளாகம் தொடங்கும். அதில் தற்போதைய அரசு அலுவலகங்கள் அனைத்தும் இயங்குகிறது. அரசர் பெயரில் தொடக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் இயங்குகிறது. சுமார் 120 க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரண்மனை வளாகம் இருக்கிறது. இது தற்போதைய சுருங்கி 20 ஏக்கருக்குள் வந்துவிட்டது. 17 ஆம் நூற்றாண்டு சென்னப்ப நாயக்கர், அரண்மனை வளாகத்தில் ஒரு கோபுரம்கட்டி அதிலிருந்து ஸ்ரீரங்கத்தை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த மண்டபம் சிதிலமடைந்து விட்டதால் அதனருகில் தற்போதைய காலத்திற்கேற்ப ஒரு படிநிலைக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழக அரசின் தொல்லியல் துறையால் கண்காணிக்கப்படுகிறது.
தஞ்சை அரசு அருங்காட்சியகம் இருக்கிறது. இதனுள் 8 ஆம் நூற்றாண்டுமுதல் 16 ஆம் நூற்றாண்டு வரையிலான புடைப்புச்சிற்பங்கள், அகழ்வாய்வு செய்து எடுக்கப்பட்ட பொருள்கள் என அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கற்சிற்பங்களே அதிகமாக உள்ளது. இதற்குக் கட்டணம் ரூபாய் 5 வசூலிக்கின்றனர். ஏற்கனவே, முகப்பில் ஒரு நபருக்கு 50 ரூபாய் வசூல் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு இடத்திற்கும் ஐந்து ரூபாய் என தனித்தனியே வசூல் செய்யப்படுகிறது.
இதன் அருகே தர்பார் மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபம் முழுமையாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு எதுவும் இல்லை. ஆனால் மகாராட்டிரர் எனப்படும் சரபோஜி கடைசியாக ஆட்சி செய்ததும் அவர்களது வாரிசுகள் இந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாங்கள் அவர்களையெல்லாம் பார்க்க விரும்பவில்லை. பார்க்க இயலவில்லை. அங்கிருக்கும் பணியாளர்கள் கேள்வி கேட்டால் முறையான பதில் இல்லை. அடுத்து அருகில் சரசுவதி மகால் நூலகத்திற்குள் சென்றோம்.
ஏற்கனவே ஆண்ட்ரோ கேதிசு குறித்து பேசிக்கொண்டிருந்ததால் அங்கு போய் ஏதாவது விசாரிக்கலாம் எனத்தோன்றியது. சிவாவுடன் வரவேற்பறையில் இருக்கும் நபரிடம் பேசி நூலகத்திற்குச் சென்றோம். ஆனால் அவரோ, மணிமாறன் என்பவர் இருக்கிறார் அவரைப் போய் பாருங்கள், உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நாங்களும் அவரைச்சென்று பார்த்தோம், அவர் ஏற்கனவே புதுக்கோட்டையில் கடந்த சூலை 15,16 ஆவணம் நிகழ்வில் பங்கெடுத்தவர். எனவே, எங்களைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்றார்.நாங்களும் அய்யா இது போல புதுக்கோட்டையில் நமது தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியிட்டதும், ராஜவேலு, பூங்குன்றன்,சசிகலா போன்றவர்களின் பெயர்களைச் சொன்னதும் அவரே அமர வைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்.
உடுமலை வரலாறு குறித்தும் உடுமலை வரலாற்றின் ஆய்வாளர்கள் குறித்தும், அட்டைப்படத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கேட்டு விசாரித்தார். தலைவர் திரு. குமாரராஜா அவர்களைப் பற்றி பேசும்போது வயதானவர்கள்கூட உங்களுடன் பயணிப்பது மிகவும் மகிழ்வாக இருப்பதாகச்சொன்னார். நாங்களும் அவர் வயதானவர் அல்ல, எங்களது அமைப்பின் தலைவர். அமைப்பை முறையாகப் பதிவு செய்து, நூல் வெளியீடுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய எங்களின் ஆளுமை என்று சொன்னதும் மிகவும் அகமகிழ்ந்தார்.
மூர்த்தீஸ்வரி பற்றி பேசும்போது அவரின் முகம் வேறு மாதிரியாக இருந்தது. பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது உதவியாளர் அழைத்து ஏடகம் நூலையும் அவரது நீர் மேலாண்மை புத்தகத்தையும் எடுத்து வரச்சொன்னார். வந்ததும் நாங்கள் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் கொடுக்க அவர் நீர்மேலாண்மை, ஏடகம் எனும் இரண்டு நூல்கள் கொடுத்து படம் எடுத்துக்கொண்டார்.
கரைவழி நாடு குறித்தும், தென்கொங்கு குறித்தும் ஏராளமான தரவுகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக உங்களைப்போன்று அந்தந்த பகுதி சார்ந்த மக்கள் அந்தந்த பகுதிகளை ஆய்வு செய்வதுதான் சிறப்பாக இருக்கும் எனவும், தம்மை தமிழ்நாடு முழுமைக்கும் அழைக்கின்றனர். ஆனால் நான் சென்று என்ன செய்வதெனக் கூறினார். உடுமலை வரலாற்றுப்பணிகளை மிகவும் மதிப்பதாகவும், சிறப்பாகச் செயல்பட தம்முடைய ஆதரவைத் தருவதாகவும் கூறினார். அமர்நாத், ராமகிருஷ்ணன், செந்தலை கௌதமன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்களைப் பற்றிப் பேச்சும் வந்தது. உடனடியாக அவரை அழைக்கலாம் என அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. சரி , அமுதன் அவர்களுக்கு பேசிவிடலாம் என்று தொலைபேசி அழைத்த போது கார்த்திகேய சிவசேனாதிபதி அழைத்தார். மீண்டும் துண்டித்து அவரை அழைத்துப்பேச உடனடியாக மணிமாறன் அவர்கள் தொலைபேசி மிகவும் அகமகிழ்ந்து அவரிடம் பேசினார்.
கார்த்தி அய்யா நீண்ட நாளைக்குப்பிறகு நாமும் தொலைபேசியில் பேசிய மனநிறைவு. மீண்டும் 1.05. 08 வரைக்கும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அங்கிருக்கும் ஒலி ஒளி அமைப்பில் படம் பார்க்க 1.30 வரைகாத்திருந்தோம். அப்போது வெளியில் வரும்போது அந்த வரவேற்பாளரிடம் சொல்லாமல் மணிமாறன் அவர்களைப் பார்த்தது ஏதோ உள் அரசியல் காரணமாக நம்மைக் கடிந்து கொண்டார். உடனடியாக அங்கு வந்த மணிமாறன் சில சுடுசொற்கள் பேசிவிட்டு என்னைப்பார்க்க ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் வந்தால் விடவேண்டியதுதானே, ஏன் தடுக்கவேண்டும் எனவும், நமக்குள்ள பாலிடிக்ஸ் இருக்கலாம் அதையும் வரும் பார்வையாளர்களிடம் செலுத்த வேண்டாமே என்று வரவேற்பாளரிடம் பேசிவிட்டு சென்றார்.
அதற்குப்பிறகுதான் சிவா சார் சொன்னார் வெளியில் வரும்போது வழி தெரியாமல் அவரது அறைக்குள் போனது பற்றி. அதனால்தான் அவர் கடுப்பாகிவிட்டார். மீண்டும் அவரிடம் பேசிவிட்டு திரைப்படத்திற்காகக் காத்திருந்தோம். அப்போது உணவிற்காக வெளியில் செல்ல வந்த மணிமாறன் மீண்டும் நன்றி சொல்லிவிட்டு சென்றார். அவர் பேசும் போது உடுமலை ஜிவிஜி கல்லூரியில் தொல்லியல் சார்ந்து கருத்தரங்கு ஏற்பாடு செய்யுங்கள் தாம் வருவதாகத் தெரிவித்தரர்.
வெளியில் அமர்ந்திருந்தோம் மணி 1.30 திரைப்படம் போடுவதற்கு அழைப்பு விடுத்தனர். உள்ளே ஏ.சி. போனதும் நல்ல தூக்கம் சுமார் 20 நிமிடம் படத்தை 10 நிமிடம் பார்த்துவிட்டு நல்ல தூக்கம். ஆடியோ மட்டும் பதிவு செய்யப்பட்டது.
வெளியில் வந்ததும் சரி ராஜராஜன் மணி மண்டபம் போலாம் எனவும் அங்கு போவதற்கு முன் சாப்பிடலாமா எனப்பேச்சு வந்தது. காலையில் மணிவண்ணன் தங்கை டப்பிகளில் போட்டுக்கொடுத்த பொங்கல் இருந்தது. அதை அந்த மணி மண்டபம் சாப்பிடலாம் என்ற எண்ணத்தோடு திரும்பவும் வந்த வழி. கோயிலுக்கு முன்புறம் வந்து பாலம் ஏறி இறங்கி அரை கிலோ மீட்டருக்குள் மணி மண்டபம் வந்துவிட்டது. இங்குதான் சசிகலா பேரைச் சொன்னதும் டிக்கட் வாங்கவில்லை. சரி உள்ளே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அருங்காட்சியகம் சென்று பார்த்தோம். மணிக்கூண்டு மேலே போலாம் என்றால் சிவா சார் வேணாம் தோழர் அங்கே ஜோடி ஜோடியா உட்கார்ந்திருக்காங்க என்று சொன்னதும் மேலே ஏறாமல் அப்படியே திரும்பிவிட்டோம்.
அருங்காட்சியகத்திற்குள் குறைவான பொருட்களே இருந்தது. இருப்பினும் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றுப்பொருள்களை இவ்வளவு காலம் கழித்து பார்ப்பதே மிகவும் பெரிய செய்திததான். அங்கும் சசிகலா பேரைச்சொன்னதும் டிக்கட் வாங்கவில்லை. ஒவ்வொன்றையும் நின்று பார்த்துப் படித்தோம். அங்கு சேரனின் அரண்மனை என்ற படம் இன்னமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது.
திருவஞ்சைக்களத்தில் இந்த அரண்மனை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அடர்ந்த மலைப்பிரதேசத்தில் இவ்வாறான அரண்மனை சாத்தியமா? ஏன்ற கேள்வியோடு அங்கிருந்து வெளியே வந்தோம். மீண்டும் திருவையாறு எப்படி வந்த வழி ஆம் அரண்மனை வழியாகாத்தான் தலைவர் அய்யா சொன்னதால்தான் அங்கு செல்ல வேண்டி வந்தது. அய்யா அவர்கள் தேவையில்லாமல் எதையும் சொல்ல மாட்டார். அதனார் சரி என்று அங்கு போகிறோம்.
மண்டக்கரம்பை, அம்மணப்பேட்டை மற்றும் கரை வழி நாட்டு நல்ல வயல்வெளிகளுடன் வாகனம் சென்றது. சிவா சார் ஏன்தோழர் இது நம்ம கரை வழிநாடு மாதிரியே இருக்கு என்று சொன்னவர் மீண்டும் இல்ல இல்ல இந்த வயல் வெளி மாதிரி கரை வழி இருக்கு என்று சொன்னார். எப்படியோ அவருக்கு பேச்சோடு வாகனமும் சென்று கொண்டிருக்கிறது. பேசிக்கொண்டே ஒவ்வொரு இடத்தின் பேரைச்சொல்லி அவ்விடத்தை மீண்டும் மீண்டும் சொல்லி பதிவு செய்யச் சொன்னதால் தற்போது எழுதுவதற்கு மிகவும் ஏந்தாக இருக்கிறது.
வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் அடுத்த கண்டியூர், நடுக்கடை, மேல் உத்தவநல்லூர் என ஊரும் நகர, வாகனமும் ஊர்ந்து சென்றது. ஒரு சில இடங்களில் புகைப்படமும் எடுக்கப்பட்டது. 4.18 க்கு திருவையாறு சென்று சேர்ந்தோம். அங்குதான் ஒவ்வொரு ஆண்டும் பார்ப்பனர்களின் இசை நிகழ்வு நடைபெறும். திருவையாற்றில் கணபதி ராஜாங்கம் என்பவர் சூத்திரர் என்பதற்காக இசை நிகழ்ச்சி நடத்தும் போது கீழே அமர வைத்து நடத்தினார்கள் பார்ப்பனர்கள் மேடையிலும், சூத்திரர்கள் கீழேயும் அமர்ந்து இன்னமும் நடைபெறுகிறது. மேடை படம் எடுக்கப்பட்டது.
இங்கு யானை இருக்கிறது. இதன் பெயர் தர்மாம்பாள். யானையும் பார்ப்பனத்தி ஆக முயற்சி செய்கிறார்கள். கோவில் திறக்கவில்லை. நாங்கள் போன பிறகு பூசாரி வந்தார். பூசாரி கூடவே சிவா செல்ல, நானும் பின் சென்று கோயில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து விட்டேன். ஆனால், வீட்டம்மா அறிவு வழிபாடு முடிந்து வருவதற்கு 4.40 ஆகிவிட்டது. திருவையாறு இன்னொரு காசி போன்று தோன்றியது.
அங்கேயே வழி கேட்டு கீழப்பழூவூர் சென்று அங்கே முதன்மைச்சாலையை அடைந்துவிடலாம் என்று ஒவ்வொரு ஊராகக் கேட்டும் பார்த்தும் வந்தோம். திருவையாறு கடந்ததும் நல்ல வயல்வெளிகளை மறைத்து லே அவுட் போட்டு வருகின்றனர். வயல்வெளிகள் வீடுகளாகப் போகிறது. இனி வரும்காலத்தில் சாப்பிடுவதற்கு என்ன செய்ய?
கீழப்பழுவூர் என சொல்லிக்கொண்டே வந்தார். அடிக்கடி பெயரை மாற்றியும் அது என்ன ஊர்த்தோழர், கீழப்பழையூர் என சொல்லிக்கொண்டே வர பெயரும் மறந்துவிட்டது. திருமானூர், முடிகொண்டான், வெற்றியூர், அயன்சுத்தமல்லி, அடுத்து கீழப்பழுவூர், இதில் முடிகொண்டான், வெற்றியூர் எல்லாம் பொன்னியின் செல்வன் வழித்தடங்கள், வெற்றியூர் போரில் வெற்றி பெற்றதற்கான ஊர், முடிகொண்டான், முடி சூட்டியதற்கான அடையாளமான ஊர். அடுத்து கன்னகம். ஆங்கியனுர், கீழரசூர், புன்னம்பாடி, இருதயபுரம், புஞ்சை செந்தே என்ற ஊரும் வந்தது. புஞ்சை என்பதன் நெல்வயல்கள் நிறைந்த புஞ்சை நிலம். ஆதையொட்டியே இந்தப் பெயர் அமைந்திருக்கும்.
அடுத்து ஈ. வெள்ளலூர், நமது கொங்கு மண்டலத்தில் கோவைக்கருகில் வெள்ளலூர் மிகவும் பழமையான அதிக காசுகள் எடுத்த இடம். அந்த நினைவுதான் வந்தது. அடுத்து ஏடிபி பழைய மேலாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் நினைவு வர அவரை அழைக்கலாம் என்று நினைத்த போது அவரின் பெயர் இல்லாமல் எண் மட்டும் இருந்தது. செல்வபாண்டியன் ஐ.டியில் அவரைப் பெயர் சேவ் செய்த போது கால் போய்விட்டது. உடனடியாக அழைத்துவிட்டார். அய்யா இது மாதிரி வந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்ன போது குழந்தை போல் கட்டாயம் வாங்க உங்கள் வரவை ஆவலுடன ; எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி அந்த நினைவாகவே வந்த போது முதலில் பை பாஸ் இல்லை தற்போது பைபாஸ் போடப்பட்டதால் பெரம்பலூருக்கும் பைபாஸ்க்கும் இடைவெளி அதிகமாகிவிட்டது. இதனால் அந்த நினைவுடன் வந்ததால் திருச்சி வரை வந்துவிட்டோம். என்ன செய்ய திருச்சிக்குள் வாகனத்தை விட உடனடியாக வழி மாறிச்செல்ல மீண்டும் நகருக்குள் வந்து மீண்டும் மேம்பாலத்தில் ஏறாமல் கீழேயே வந்து, ஒரு வழியாக திருச்சியில் வெளியில் வந்த வழியிலேயே மணப்பாறை வந்து, வேடசந்தூர் வழியாக தொப்பம்பட்டி வரும்போது கீரனூருக்கு கிழக்கில் திருவிழா கூட்டத்தில் இடது புறம் வாகனம் திருப்ப, சுமார் ஒரு மணி நேரம் வீணாகி எரிபொருள் செலவாகி வீட்டுக்காரம்மா விடம் திட்டு வாங்கி, கள்ளி மந்தயம் செல்லாமல், ஏதோ அம்பிளிக்கை வழியாக மீண்டும் முதன்மைச்சாலைக்கு வந்து தொப்பம்பட்டி வழி மாறி மீண்டும் ஏதோ ஒரு கிராமத்திற்குள் ஒருவரின் சொல்லைக்கேட்டு மீண்டும் வழி மாறி தொப்பம்பட்டி முதன்மைச்சாலை அடைந்தும் மீண்டும் உறுதிப்படுத்தி மேற்கில் வர மணி 9.20 சுமார் ஒரு மணிநேரம் வீண் அலைச்சல், சிவா சலுப்பில்லாமல் வாகனம் ஓட்டிவந்தார். தொப்பம்பட்டி மேற்கில் வந்து மேல்கரைப்பட்டியில் உணவு சாப்பிடும்போது 9.50 என்ன செய்ய, 8 மணிக்கு முடிய வேண்டிய பயணம் இரவு 11 மணிக்கு முடிந்தது.
நல்லதொரு அனுபவங்களை சுமந்துகொண்டு சிறிது அலுப்பு இருந்தாலும் நல்லதொரு இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்த மனநிறைவு இருந்தது. இதில் முதல் நன்றி சிவாவுக்கு, இரண்டாவது நன்றி மணிவண்ணன் மற்றும் அவரது தங்கைக்கு.
மீண்டும்அடுத்த பயணத்தில் சந்திப்போம்.
Comments
Post a Comment