தொலைந்து போகும் நமது கிராமங்கள்.....
தொலைந்து போகும் நமது கிராமங்கள்.....
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு எழுத்தாளரின் ஊர். எழுத்தாளர் இரா. தங்கபாண்டியன் அவர்களின் தொலைந்து போகும் நமது கிராமங்கள் எனும் நூலை வாசித்தேன். ( அலைபேசி : 94436 66579 ) பதினாறு நிகழ்வுகளை பதினாறு கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் தன்னுடைய சமூகத்தின் பால் ஈர்ப்பான செய்திகளையும் எழுதியுள்ளார்.
ஏற்கனவே இவர் கவிதை நூல்கள் எழுதியிருந்தாலும் இந்தத் தேர்ந்தெடுத்து கட்டுரைகள் தங்கப்பாண்டியனின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது.
எனது மலைகள் எனது மரங்கள் எனும் தலைப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கனிம வளங்கள் மிகவும் சிறப்பாக இருந்ததையும் இனி வரும் காலத்தில் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்பதையும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதையும், அடுத்து வரும் தலைமுறைக்கு உண்மையான கனிம வளங்களைக் காட்டுவதற்கும், பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போகும் என்பதை முதல் கட்டுரை வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது கட்டுரை கற்றல் கற்பித்தல் கட்டுரையில் தற்காலக்கல்வி முறை குறித்தும், கற்பித்தல் என்பது மொழி தொடர்புடையதா எனக்கேள்வி கேட்டு அறிவு தொடர்புடையது என அவரே பதிலுரைக்கிறார். இதில் தாய்மொழிக்கல்வி குறித்தும் தாய்மொழிக்கல்வியின் அவசியம் குறித்தும் பதிவு செய்துள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கு நூறு கண்கள் வேண்டும் எனவும் அப்போதுதான் ஆற்றல் உள்ளவர்களைக் கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்க இயலும் எனவும் கூறுகிறார். கடந்த காலங்களில் கல்விஅறிவு பெற சொல்லப்பட்ட அறிவொளித்திட்டத்தையும் முறைசாராக் கல்வியினையும் பதிவு செய்துள்ளார். கல்வி குறித்தான தமது அக்கறையை எல்லாவிடங்களிலும் பதிவு செய்துள்ளார்.
நாட்டார் பிணியும் உறுபசியும் எனும் கட்டுரையில் சமூகத்தில் உண்மையில் ஆங்காங்க நிகழும் நிகழ்வுகளைச் சான்றுகளோடும் புள்ளி விவரங்களோடும் பேசி தனது முடிவான கருத்தினையும் பதிவு செய்துள்ளார்.
தாரா எனும் கதையில் ஊர்க்காவல் புரியும் சாதரரண மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தின் இடப்பெயர்வையும், சொந்த ஊரில் இருப்பதையும், அதே தொழிலுக்காக வெளியூரில் வேலை செய்யும் ஏற்படும் இயல்பான நிகழ்வுகளைப் பதிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையில் மனிதன் தன்னை அடுத்த கட்ட வாழ்க்கைப்போராட்டத்திற்கு செல்லாமல் தற்கொலை, சாவு எனும் முடிவான நிலைக்குச் செல்வதை கூறியுள்ளார்.
பிள்ளைக்கறி எனும் கட்டுரையில் தற்போதிருக்கும் கல்வி முறை குறித்தும், கேம்பஸ் தொழிலாளர்கள் எனும் பஞ்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தனது வாழ்க்கையை இழக்கும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பற்றியும், கல்வி குறித்து புள்ளிவிவரங்களோடு பிள்ளைகள் படிக்க வசதியும் வாய்ப்புகள் இருந்தும் படிக்காமல் இருப்பது பற்றியும் இவர்கள் இயந்திரங்களுக்குத் தீனியாகப்போவதை பிள்ளைக்கறி என்று தன்னுடைய வேதனைகளை எழுத்துகளாகப் பதிவு செய்துள்ளார்.
தொலைந்து போகும் நமது கிராமங்கள் என்று ஏற்கனவே இருந்த கிராமத்தின் நிலை குறித்தும் இனி வரும் காலத்தில் கிராமங்களின் நிலை குறித்தும் தன்னுடைய ஆற்றாமையை எழுத்துக்களாகப் பதிவு செய்துள்ளார். தலைப்பிலேயே தொலைந்து போகும் நமது கிராமங்கள் எனும் சோகக் குறியீடுகளுடன் கட்டுரை முழுக்க கிராமங்களின் இயற்கையாள வளங்கள் குறித்தும் இனி வரும் காலத்தில் இனி இவ்வாறு இருக்கப்போவதில்லை என்பதைச் சொல்லி இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்டு என்கின்ற தன்னுடைய சமூக அக்கறையை எல்லாவிடங்களிலும் பதிவு செய்துள்ளார்.
இவரின் எழுத்தில் முக்கியமாக இவரைப்பாராட்டி எழுத வேண்டிய செய்தி பதினைந்தாவது கட்டுரை அட இப்புவுமா சாதி பாக்குறாங்க எனும் கட்டுரை சமூகத்தில் அடிநாதமாய் இன்றளவும் எல்லாவிடங்களிலும், எல்லோருடைய மனதிலும் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் தம்முடைய வாழ்நாள் முழுக்க பாடுபட்ட செய்தியினை இவர் மிகவும் எளிமையாக, சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய மிகவும் முக்கியமான செய்தியாக பதிவு செய்துள்ளார்.
இன்னமும் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் சாதி பார்த்து பழகும் நிகழ்வுகளையும், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இன்றளவும் வெளியில் சொல்லாமல் நடைமுறையில் இருக்கும் சாதிய மனப்பான்மையினை கண்ணாடியாகப் பதிவு செய்துள்ளார்.
ஒருவர் இன்னொருவரின் சாதியைத் தெரிந்து கொள்வதில் காட்டும் அக்கறையும் அவர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்தால் அவரிடம் பழகும் அணுகுமுறையினையும் பல்வேறு உண்மையான ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார் தங்கபாண்டியன்.
உழவர்களைக் கொண்டாடுவது எப்போது? ஏற்றமுன்னா ஏற்றம், சாயம் போகும் நதிகள், கழிவுகளின் தேசம், இது வேறு பணியமைப்புகள், இளையபாரதத்தினாய், பேசாப் பொருளைப் பேசுவதாரோ என சமூகத்தின் அனைத்து இயங்கு நிலையிலும் இருக்கின்ற ஒவ்வொரு நிகழ்வினையும் ஒவ்வொரு கட்டுரையாகப் பதிவு செய்துள்ளார்.
தம்முடைய எழுத்தில் சமூகத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் சொல்ல வேண்டும் என்ற சமூக அக்கறை அனைத்துக் கட்டுரைகளிலும் தெரிகிறது. மேலும் தாம் சொல்லக்கூடிய செய்திகள் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று தெளிவான கண்ணோட்டத்தில் அனைத்து செய்திகளையும் புள்ளிவிவரங்களுடனும், சங்க இலக்கியப் பாடல்களோடும் பதிவு செய்துள்ளார்.
இவரின் பொருளாதாரம் சார்ந்த சமூகச்சிந்தனைகளும், சமூக அரசியல் சார்ந்த சிந்தனைகளும் இவரின் எண்ணவெழுத்தில் உருவெடுத்தாலும் சாதீயம் குறித்தான கட்டுரையே இவரின் எழுத்துகளை அடுத்த கட்ட சமூக மாற்றத்திற்காகக் கொண்டு செல்லும் என வாழ்த்துரைப்பேன்.
இவரின் எழுத்துகள் இன்னும் வளர வேண்டும். ஒரு சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் தன்னுடைய சமூகத்தில் இருக்கும் அனைத்துநிகழ்வுகளையும் தனக்கு சரியெனப்பட்டதை சரி எனவும், தவறெனப்பட்டதை தவறு எனவும் முழுமையான கருத்துச் சுதந்திரத்துடன் பதிவு செய்துள்ள எழுத்தாளர் தங்கபாண்டியன் அவர்களுக்கு மீண்டுமொரு முறை வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
நன்றி ...
அ .கருணாநிதி ...
வீ .கே .சிவக்குமார்
உடுமலைப்பேட்டை ...


Comments
Post a Comment