தமிழகம் தாண்டி சென்ற இந்த தகவல் இன்னும் உடுமலையின் மண்ணின் மைந்தர்களுக்கு சென்று சேராதது மிகவும் வியப்பாக உள்ளது.
ஆயிரம் சான்றுகள் உண்டு ஆனாலும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
ஆம், 1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ கேதீசு எனும் ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட
நிகழ்வு கல்வெட்டாகப்
பதியப்பட்டுள்ளது. இதைக் கல்வெட்டு ஆய்வறிஞர்கள், முனைவர் இந்திரசித்து, முனைவர் ரவி, போன்றோரும் ஆவணப்படுத்தி அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.
நமது வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 20.09.2014 ல் முனைவர் இந்திரசித்து அவர்களின் தளி எத்தலப்ப மன்னர் அறிமுக நூலும், முனைவர் மா. மதியழகனின் தென் கொங்கு நாட்டின் விடுதலைப் போர் நூலும் இன்று வரை அரசுக்கும் அரசு ஆவணங்களுக்கும்
சான்றாகத் திகழ்கிறது.
2018 மே 19 ல் அப்போதைய செய்தி தொடர்பு துறை அமைச்சர் இந்த நூல் வெளியீட்டு வருவதற்கு முன்பே சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ‘எப்படி தமிழ் மண்ணில் ஒரு ஆங்கிலேயன் தூக்கிலிடப்பட்டான்” என வியப்புடன் பலவாறான கேள்விகளை முன் வைத்து விசாரணை செய்தார்.
நாங்களும் இருக்கும் கல்வெட்டு ஆதாரங்களையும், அரசு ஆவணக்காப்பகத்தில் தேடி எடுக்கப்பட்ட சான்றுகளும், 1958 ல் உடுமலை நகராட்சி மலரில் எழுதிய கட்டுரைகளையும், 1982 ல் குங்குமம் இதழில் வந்த கட்டுரைகளையும் இது நாள் வரைக்கும் களப்பணியில் கிடைத்திட்ட
தகவல்களையும் வைத்து சான்றாக உறுதிப்படுத்தினோம்.
இவையனைத்தும் கேட்டு வியந்த அமைச்சர் பெருமகனார் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னமே மே 18 அன்று வருகை தந்து தூக்குத்தோட்ட
புளியமரம், கோட்டைக்காடு,
தளி எத்தலப்பரின்
செவி வழிச்செய்திகள்,
வம்சாவழியினர் என அனைத்து தரப்பு மக்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார்.
அன்றே மே 19 ல் நிகழ்வில் மணிமண்டபம் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.
அன்று உள்ளுர் அமைச்சரும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினரும் இதை உறுதிப்படுத்தி
கட்டாயம் மணி மண்டபம் கட்டப்படும் என்றனர். அந்த அளவுக்கு சான்றுகள் இருப்பதைப் பேசினர்.
மேலும் இந்த நூலுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர்கள்,ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், குறிச்சிக்கோட்டை
வருவாய் ஆய்வாளர், தளி பேரூராட்சி செயல் அலுவலர் என அனைத்து தரப்பு அரசு அதிகாரிகளும்
உறுதி செய்து வாழ்த்துரையும் அணிந்துரையும் வழங்கினர்.
மேலும் இதை உறுதி செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் நாள் மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் இரண்டு கோடியே அறுபத்தி இரண்டு இலட்சத்திற்கு மணி மண்டபம் கட்டவும் உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது முதற்கட்டப்
பணியாக அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஆங்கிலேயனைத்
தூக்கில் போட்ட இடத்தை தமிழக அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் என அனைவருமே ஆய்வு செய்தனர்.
ஆனால், தமிழகம் தாண்டி சென்ற இந்த தகவல் இன்னும் உடுமலையின் மண்ணின் மைந்தர்களுக்கு சென்று சேராதது மிகவும் வியப்பாக உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் எழுபத்தி ஐந்தாம் நாள் சுதந்திர தின விழாக்கொண்டாட்டத்தைக் கொண்டாடும் நாம் ஒரு ஆங்கிலேயனைத்தூக்கிலிட்ட நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவோம்.
இந்திய விடுதலைக்கு
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, போன்ற தலைவர்களை நினைக்கும் நம்முடைய பகுதியில் உயிர் நீத்த உண்மையான விடுதலைப்போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம்.
உடுமலை வரலாறு 01.08.2022
Comments
Post a Comment