திண்டுக்கல்: ஆட்டம் பாட்டத்தில் மகிழ்ந்த பெருமாள்; வலுகட்டாயமாக
மலையேற்றிய பக்தர்கள்
மு.கார்த்திக்
ஊர்வலத்தில் பெருமாள்
பெருமாள் மக்களோடு மக்களாகத் திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தில்
மகிழ்ந்ததால் மலையேறத் தயக்கம் காட்டுவதாகவும், அதனால் பெருமாளை வலுகட்டயாமாக பக்தர்கள்
மலையேற்றுவதாகவும் கூறப்படும் நிகழ்வுடன் திருவிழா முடிந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோ.காமாட்சிபுரத்தில்
பழைமையான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த
3 நாள்களாக நடைபெற்றது. விழாவில் ஊரின் அருகே உள்ள பெருமாள் மலையில் இருந்து வாணவேடிக்கையுடன்
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நாள் தேவராட்டம், காவடியாட்டம் என ஆட்டம்
பாட்டத்துடன் பெருமாள் வீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். மூன்றாவது நாள் ராஜகம்பள
சேவை விளையாட்டுகள் நடந்தன.
பெருமாள்
இதையடுத்து நடந்த மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெருமாள்
ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விடைபெற்றுகொள்வதாகக்கூறி மலையை நோக்கிப்
புறப்பட்டார். ஆனால் பெருமாள் மக்களோடு மக்களாகத் திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தில்
மகிழ்ந்ததால் மலையேறத் தயக்கம் காட்டுவதாகவும், அதனால் பெருமாளை வலுகட்டயாமாக பக்தர்கள்
மலையேற்றுவதாகவும் கூறப்படும் நிகழ்வுடன் திருவிழா முடிந்தது.
சென்னம நாயக்கர்
இதுகுறித்து ஊர் பெரியவரான சென்னம நாயக்கரிடம் பேசினோம். எங்கள்
முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி 2 ஆண்டுக்கு ஒருமுறைதான் இந்தத் திருவிழா நடந்தப்பட்டு
வருகிறது. இதேபோல முத்தாலம்மன் கோயில் திருவிழாவும் 2 ஆண்டுக்கு ஒரு முறை எங்கள் ஊரில்
நடந்து வருகிறது. இந்த விழா முழுக்க முழுக்க ஊர்மக்களின் திருவிழா வரி மூலமாகவே நடத்தப்படுகிறது.
திருவிழா
மலையிலிருந்து இறங்கிவரும் பெருமாள் மேளதாளங்கள், கொட்டுகள்
முழங்க, வாணவெடிகள் போடப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் அழைத்து வரப்படு்வார். ஊரில் உள்ள
அலங்கார மண்டபத்திற்கு வரும் பெருமாள் பூச்சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்படுவார்.
பெருமாளுக்கான மரியாதை வழங்கப்படும் 3 வீடுகளுக்கு செல்வார். அவருக்கு 3 வீட்டுக்காரர்களும்
பெருமாளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள். இதைமுடித்துவிட்டு ஊரில் உள்ள அனைத்து
வீதிகளுக்கும் சென்று திரும்புவார்.
மலையேற்ற நிகழ்வு
மறுநாள் தம்புராயன்கோயில் உள்ள தாயார் தெய்வத்திடம் இருந்து
மக்கள் மன்றம் வந்து மங்கள இசையுடன் திருக்கல்யாணம் நடைபெறும். தேவராட்டம் உருமிமேளத்துடன்
நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடத்தப்படும். அன்றிரவு பூச்சப்பரத்தில் மக்களை சந்தித்து ஆசி
வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் வீதி உலா வருவார். ஆடல் பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சி
நடைபெறும் இடங்களுக்கு பெருமாள் அழைத்துச்செல்லப்படுவார். இதையடுத்துப் பெருமாள் விடைபெறும்
நிகழ்ச்சி தொடங்கும். அதில் வெள்ளைச்சீலை அணிந்த 15 பெண்கள் பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டுவார்கள்.
கோயிலில் இருந்து புறப்படும் பெருமாள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீராட்டுதல்
நிகழ்வை முடித்துக் கொண்டு திரும்புவார்.
வரவேற்பு நிகழ்வு
இவ்வாறான நிகழ்வுகளில் திருமண வரனுக்காக காத்திருப்போர், குழந்தை
பாக்கியம் வேண்டுவோர் அனைவரும் வேண்டுவர். ஏற்கெனவே வேண்டிக் கொண்டு நலம் பெற்றவர்கள்
தங்களின் அக்னி சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைத் தீர்ப்பார்கள்.
இந்த 3 நாள்கள் திருவிழா முடித்துக் கொண்டு பெருமாள் மலையேறத் தயக்கம் காட்டி அடம்பிடிப்பார்.
அழைப்பு நிகழ்வு
அவரைச் சில வசைச் சொற்களை கூறி வலுகட்டாயமாக வழியனுப்புவோம்.
அதற்கு முன்னதாக அவருக்கு அணிவிக்கப்பட்ட அலங்கார நகைகள், உடைகள், பூமாலைகள் எடுத்து
பெட்டியில் வைத்து ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்குக் கொண்டுவரப்படும். வலுக்கட்டாயமாக
அழைத்துச் செல்லப்படும் பெருமாள் மலையில் உள்ள கோயிலில் இறக்கிவிடப்படுவார். இத்துடன்
திருவிழா நிறைவடையும் என்றார்.
வீதி உலா
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் வினோதத் திருவிழாவில்
ஊரில் இருந்து வத்தலகுண்டு மட்டுமில்லாது திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளும்
இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
நன்றி ..விகடன் குழுமம் ...
Comments
Post a Comment