கேள்வி : நாற்பதுகளில் உள்ளவர்களை ஐ.டி துறையில் மற்றும் மார்க்கெட்டிங் பெரும்பாலும் வேலையை விட்டு நீக்கி இளையவர்களை பணியில் அமர்த்துகிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் :
இந்த துறையில் பல ஆண்டுகளாக (26+) பணிபுரிந்த அனுபவத்திலும், அதே 40களில் (46+) வயது வரம்பில் இருப்பதனாலும், இதற்கு விடையளிக்க நான் தகுதியானவன். அனைத்து 40+ வயதானவர்களையும் அலாக்காக தூக்கி எறிவதில்லை. நமக்குத் தனித்தன்மை இருந்தால் நிமிர்ந்து நடை போடலாம். எனக்குத் தெரிந்தவரை இந்த வயது வரம்பிலுள்ள சிலர் தங்கள் வேலைகளை இழப்பதற்கான காரணங்கள்,
1. தமது திறமையை வளர்த்துக்கொள்வதில்லை. இந்த துறை கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதி வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தொழில்நுட்பங்கள் தற்பொழுது தேவை குறைந்தவையாக மாறிவிட்டன (உதாரணமாக Oracle, PLSQL…). ஏன் Java வில் கூட தற்பொழுது Fullstack தொழில்நுட்பத்திற்குத் தான் மவுசு அதிகம். இவ்வாறான 'பழைய' தொழில்நுட்பங்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளவர்கள் காலரை தூக்கிவிட்டு நடக்க முடியாது. எனவே, அவ்வப்பொழுது (2-3 வருடங்களுக்கு ஒருமுறையாவது) அந்த துறையில் உள்ள வளர்ச்சிகள் என்ன என்று தெரிந்து வைத்துக்கொள்வது, மற்றும் அதற்கேற்ற அறிவை பெறுவது அவசியம்.
2. பொது மேலாளர்கள்: ஒரு காலத்தில் Project Manager பதவி என்பது தொழில்நுட்பம் (Technology) அல்லது ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய அறிவு (Domain knowledge) இல்லாமல், வெறும் திட்ட மேலாளராக இருந்தாலே போதும் என்று இருந்தது. தற்பொழுது இதில் (Technology அல்லது Domain knowledge) ஏதேனும் ஒன்று இல்லையென்றால், கொஞ்சம், கொஞ்சமாக இவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
3. அலுவலக அரசியலை மட்டுமே நம்பி, தமக்கு மேலுள்ள மேலாளர் என்ன வேலை தருகிறாரோ (அது நமது வளர்ச்சிக்கு உதவுமா, உதவாதா என்று கூட ஆராயாமல்) அதை கண்மூடித்தனமாக செய்வது என்று சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தமது மேலாளர்கள் எப்படியாவது தம்மை காப்பாற்றுவார்கள் என்று அதீதமான நம்பிக்கையுடன் இருப்பவர்கள். ஒரு சில ஆண்டுகளில் இவர்கள் 'கிணற்றுத் தவளைகளாக' மாறிவிடுகின்றனர். தமது தன்னம்பிக்கையை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து அந்த மேலாளர் அல்லது அவரது 'நட்பு குழுவினருடன்' மட்டுமே வேலை செய்ய முடியும் என்ற முடிவிற்கு இவர்களாகவே வந்து விடுகின்றனர். மேலாளர்கள் மாறும்பொழுது (அல்லது அவர்கள் தூக்கி எறியப்படும் பொழுது) இவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
4. மேற்கூறிய கிணற்றுத் தவளைகளின் நேரெதிர் இந்த நான்காம் குழுவை சேர்ந்தவர்கள். அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாற்றத்தால் சம்பளம் எகிறும். ஒரு காலத்தில் அதுவே இவர்கள் கழுத்திற்கு கத்தியாக வந்து நிற்கும். பொதுவாக ஆட்குறைப்பு செய்யும் பொழுது இந்த "அதிகபட்ச சம்பளம்" உள்ள குழுவினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக, ஒருவரின் மென்பொருள் வேலை / தொழில் அனுபவத்தில், முதல் 10-12 வருடங்களுக்கு நிரலாக்கத்தில் ஈடுபடுவதால் ஆட்குறைப்பில் பாதிக்கப்படுவதில்லை. பின்னர் 5-6 ஆண்டு காலம் வேலை மாறுவதால் கூட சிலர் தப்பி விடுவார்கள் (அல்லது அவர்களை 'பாதுகாக்க' சிலர் இருப்பார்கள்). 40 வயதை தொடும்பொழுது சிலர் இதில் சிக்கிக் கொள்கிறார்கள். எனவே, இத்தகைய ஒரு எண்ணம் (40களில் இருப்பவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்) உருவாகிறது.
தம்மை தாமே மேம்படுத்திக் கொண்டே இருப்பவர்கள் உயர்கிறார்கள். இவ்வாறான சிலர் ஒய்வு பெற்ற பிறகும் ஒப்பந்த வேலைகளில் வேலை செய்துகொண்டே இருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.
நன்றி ...
Comments
Post a Comment