கேள்வி : நீங்கள் சுற்றுலா சென்ற இடங்களில் அங்கேயே வாழவேண்டும் என நினைத்த இடம் எது?
என் பதில் :
1989-ல் வெளிவந்து சக்கை போடுபோட்ட "இதயத்தை திருடாதே" மணிரத்தினம், இளையராஜா, P.C.ஸ்ரீராமின் கூட்டணியின் சிறந்த திரைப்படம். விடுமுறையில் சித்தி வீட்டில் வீடியோ கேசட்டில் பார்த்ததாக நினைவு.
மரணத்தை எதிர்பார்த்திருக்கும் ஹீரோ நாகர்ஜுனா, தன் கவலையை மறக்க ஊட்டிக்கு செல்கிறார். ஹீரோயின் கிரிஜா, அவருக்கும் இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கின்றது. இருவரின் சந்திப்பும் அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கின்றது என்பது தான் கதை.
இசைஞானியின் பின்னணி இசையும், பாடல்களும் அற்புதம்!!!
P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, கேட்கவா வேண்டும், அதுவும் ஊட்டியை காண்பித்து இருக்கும் அழகே தனி. மேகம், பனிமூட்டம்....
இப்படத்தை பார்த்திருப்பீர்கள். மருந்துக்கு கூட நம்பமுடியாத, அப்பட்டமான புளுகு மூட்டை காதல் கதை, லூசு ஹீரோயின். பரவாயில்லை ஊட்டிக்காக மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
எங்களுக்கு புரிகிறதோ இல்லையோ K.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன் இயக்கிய திரைப்படத்திற்கு மட்டுமே அப்பா அழைத்துச் செல்வார்.
"நாயகன்" திரைப்படத்திற்கு பிறகே மணிரத்தினம். அதுவும் ஒருசில மட்டுமே:))
எல்லா திரைபடத்திலும் ஏதேனும் ஒரு டூயட் பாடலில் மட்டுமே ஊட்டியை பார்த்து இருந்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் முழுக்க ஊட்டி.
அதுவும் ஹீரோயின் இண்ட்ரோ சாங் ஊட்டி பார்க்கில் மழையில். சில படங்களில் ரேவதி கூட மழையில் ஆடி இருப்பார், எல்லாம் சென்னையின் தார் வீதிகளில்.
படம் முழுக்க ஹீரோயின் ராஜஸ்தானி மிரர் ஒர்க் ஆடை எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
1989-ல் முதலில் இந்த படம் பார்த்த போது, நானே நினைத்து கூட பார்க்கவில்லை ஊட்டிக்கு அருகிலேயே வசிப்பேன் என்று!
திருமணம் ஆனதிலிருந்து 17 வருடங்கள் கோவையில். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊட்டிக்கு விசிட்.
புதிதாய் திருமணமானவர்கள் முதன் முதலாக எங்கள் வீட்டிற்கு வரும் பொழுது எல்லோருமாக ஊட்டிக்கு செல்வோம். தனியாகவெல்லாம் அனுப்ப மாட்டோம்:))
கோடை காலத்தில் குளுமைக்காக மட்டுமல்ல, மழைக்காலத்தில் நனைந்து, குளிர்காலத்தில் நடுங்கியும் இருக்கிறோம்.
ஊட்டியில் பார்ப்பதற்கு எத்தனை இடங்கள் இருந்தாலும் எனக்கு பிடித்தது பொட்டானிக்கல் கார்டன் மட்டுமே.
அங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், வேறு ஒரு உலகத்தில் சஞ்சரிப்பதை போலவே ஒரு உணர்வு.
எந்தப் பக்கம் பாரத்தாலும் வானம், மேகம், மலைகளின் பச்சை நிறம்.
இரு விழிகளும் விரிய பார்த்தாலும், சுருக்கி பார்த்தாலும்,
வலது கண்ணை மூடி இடது கண்ணால்/இடது கண்ணை மூடி வலது கண்ணால் என்று ஒற்றைப் பார்வை பார்த்தாலும்….. கொள்ளை அழகு.
கோவையில் கோவிலுக்கு, ஷாப்பிங் மாலுக்கு, தியேட்டருக்கு எங்கு சென்றாலும், மனித முகங்களில் எல்லாம் ஒரு அவசரம். 'இங்கே முடிஞ்சதும் அடுத்தது...' என்று வேறு ஏதோ சிந்தனையிலேயே நகர்வார்கள்.
ஆனால் நான் பார்த்த வரையில் பொட்டானிக்கல் கார்டனில் அனைவர் கண்களிலும் ஒரு பிரம்மிப்பு, மகிழ்ச்சி. ஒவ்வொரு அணுவிலும் குளிர்ச்சி.
தனியாய், தம்பதியராய், குடும்பமாய், குழுவாய் எப்படி வந்திருந்தாலும், சந்தோஷத்திருப்பதாகவே எனக்கு தோன்றும்.
சந்தோஷமான முகங்களை பார்க்கும் போதே….ஆஹா…
ஃபோட்டோவெல்லாம் அங்கு உலாவிக் கொண்டிருக்கும் போட்டோகிராபர் தான் நன்றாக எடுப்பார். எந்த இடம்/ஆங்கிள் எல்லாம் அவர்களுக்கே நன்றாக தெரியும்.
எடுத்து சென்ற புளியோதரையும் உருளைக்கிழங்கு பொடிமாசும் சாப்பிட்டு முடித்ததும், கோவைக்கு திரும்ப மனமில்லாமல்
கடமையெல்லாம் முடிஞ்சதும்,
இங்க பக்கத்திலேயே எங்கேயாவது சின்னதா ஒரு வீடு வாங்கி செட்டில் ஆயிடலாம்
என்று பிதற்ற ஆரம்பித்து விடுவேன்.
"ம்ம்... கிளம்பு நேரம் ஆகுது" என்று என்னை பிடித்து இழுத்து வந்து விடுவார்கள்.
நானும் சின்ன குழந்தை போலவே…
இந்தியாவில் நடக்கும் சிறந்த மலர் கண்காட்சிகளில் ஊட்டி மலர் கண்காட்சியும் ஒன்று.
ஊட்டி மலர்க்கண்காட்சி ஆரம்பித்துவிட்டது . வாய்ப்பு கிடைத்தால் கண்டு மகிழுங்கள்..
நினைவில் நின்ற பயணங்கள் ...
Comments
Post a Comment